பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அரச பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆளும் கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் நவம்பர் 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட வடக்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கத்தை வல்வெட்டித்துறை பொலிஸுக்கு வருமாறு அழைப்பு விடுத்தபோதிலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என அவர் அறிவித்த நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
வேலுப்பிள்ளையின் பிரபாகரன் தமிழீழத் தலைவராகக் கருதப்பட்டதாகவும் அதனால் அவரது பிறந்த திகத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம். கே. சிவாஜிலிங்கம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
“உறவினர் என்ற காரணத்தினால்தான் பிறந்தநாளை அனுஷ்டித்தீர்களா என என்னிடம் கேள்வி எழுப்பினர். உறவினர் என்பதற்கு மேலதிகமாக தமிழ் ஈழதத் தலைவராக அவரை கருதுகின்ற காரணத்தினால்தான் அந்த பிறந்த தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடியதாக நான் தெரிவித்தேன். ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள் என அவர்கள் கேட்டார்கள். தமிழ் ஈழத் தேசியத் தலைவராக இருந்த காரணத்தினால்தான் பிரபாகரனுடன் அன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்து இட்டிருந்தார் எனக் குறிப்பிட்டேன்.”
2024ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்ததின நிகழ்வுகள் சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றபோது அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தை அகற்றி, கொண்டாட்டத்தை மேற்கொள்ளுமாறு அவருக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் தன்னிடம் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
“பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த பதாகையில் பிரபாகரனின் புகைப்படத்தை அகற்றுமாறு பொலிஸார் கோரியிருந்தனர். அகற்றிய பின்னர்தான் நிகழ்வு இடம்பெற்றது என்ற விடயத்தையும் கூறியிருந்தேன்.”
அரசாங்கத்தின் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தான் தயார் எனவும் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
“மாவீரர் தின நிகழ்வுகளை செய்ய முடியுமென சொன்னவர்கள் ஒரு புகைப்படத்தை பார்த்து அஞ்சுகிறார்கள் எனின் இது எங்கே செல்கிறது? ரோஹன விஜேவீரவின் புகைப்படத்தைப் பார்த்து மக்கள் அஞ்சுகிறார்கள் எனச் சொன்னால் அதனை நீங்கள் நம்புவீர்களா? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.”
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாட வருகை தந்திருந்த 10 இளைஞர்கள் நவம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறை பொலிஸுக்கு வரவழைக்கப்பட்டதாகவும் அவர்களில் மூவரிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டதற்காக கடந்த நவம்பர் 30ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இணுவில் மேற்கு, சுன்னாக்கம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மனோகரன் கயந்தரூபன் (நவம்பர் 01) யாழ்ப்பாணம் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை டிசம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தெற்கில் கைதுகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பொய்யான பிரசாரம் செய்தமைக்காக சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் (நவம்பர் 01) கொழும்பு கோட்டை கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அரசியல் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளரான கெலும் ஜயசுமன கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருதானையைச் சேர்ந்த 45 வயதுடைய கெலும் ஹர்ஷன (டிசம்பர் 2) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து சந்தேகநபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகாவீரர் தினத்தை கொண்டாடும் வகையில் பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கடந்த நவம்பர் 30ஆம் திகதி அறிவித்திருந்தது.
மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் தொடர்பான பழைய காட்சிகளை சமூக வலைதளங்களில் அண்மைய நிகழ்வுகள் போல் பரப்பியதாக அவர்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
பத்தேகமவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நவம்பர் 30ஆம் திகதி பத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு டிசம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.