உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சனல்- 4 காணொளியில் பல சாட்சியங்களை வெளிப்படுத்தியிருந்த அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பணிப்பாளர் சுரேஷ் சலே ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக அஷாத் மவுலானா சனல்- 4 காணொளியில் நேரடியாகத் தோன்றி வெளிப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பில் தற்போது சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அஷாத் மவுலானாவிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அவரை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம், சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 270க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பலர் அங்கவீனமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது வரையில் எதுவித சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது.
அண்மையில் பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு அவரிடம் சுமார் 10 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது அஷாத் மவுலானாவிடம் விசாரணைகள் மேற்கொள்வதற்காக அவரை நாடு கடத்த அநுர அரசாங்கம் கோரியுள்ளது.
அஷாத் மவுலானா வடக்குக் கிழக்கில் போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைந்து பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.