2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான இந்தோரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் வித்யா விஹார் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
இதன்போது புதிய ஜனாதிபதி அடுத்த மாதம் புதுடில்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பிற இந்திய தலைவர்களை சந்திக்கும் போது பரஸ்பர ஒத்துழைப்பின் பகுதிகள் என்னவாக இருக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது இந்தியப் பயணத்தின் போது அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் பகுதிகள் குறிப்பாக பொருளாதாரக் கூட்டாண்மை ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கையெழுத்திட்டார்.
தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திவுள்ளார். இந்நிலையில் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,
“நானும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கையெழுத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பகுதிகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.
அநுரகுமார திசாநாயக்க இந்த தொலைநோக்கு ஆவணத்தை நாம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஏற்றுக் கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆவணம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல், வான், எரிசக்தி உறவுகள் மற்றும் மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதனூடாக சுற்றுலா, மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.