பட்டதாரிகளால் நிரம்பும் நாடாளுமன்றம்: புதிய மாற்றங்கள்

0
52

தேசிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அமைச்சர்களுள் 15 வைத்தியர்கள், 16 சட்டத்தரணிகள் மற்றும் மூன்று பொறியியலாளர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 50 இற்கும் அதிகமான கல்வியாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

அதன்படி அதிகளவிலான தொழில் தகுதியுடைய கல்வியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதேவேளை நான்கு பேராசிரியர்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதாக கட்சி தெரிவிக்கின்றது.

ஹினிதும சுனில் செனெவி, சேன நாணயக்கார, சந்தன அபேரத்ன மற்றும் எல். எம் அபேவிக்கிரம அந்த பேராசிரியர்கள் ஆவர். மேலும் இராணுவத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரச நிறுவனங்களில் முன்னாள் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல தொழில் வல்லுநர்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற 10ஆவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலில் எதிர்ப்பாராத பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தவிர்ந்த ஏனைய முன்னாள் அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். கடந்த அமைச்சரவையில் காணப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆகும்.

கஞ்சன விஜேசேகர, சுசில் பிரேமஜயந்த, ஹரீன் பெர்ணான்டோ, மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, மனூஷ நாணயக்கார, ரமேஷ் பதிரண, விதுர விக்கரமநாயக்க, நளீன் பெர்ணான்டோ, நிமல் சிறிபால த சில்வா, பவித்ரா வன்னியாராச்சி ஆகிய முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இவ்வாறு தோல்வியைத் தழுவியவர்களுள் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் அதிகளவு பெண்கள் பிரதிநிதித்துவம் இம்முறை பதிவாகியுள்ளது. தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் 196 மக்கள் பிரதிநிதிகளுள் 21 பெண் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

அவர்களுள் 9 சட்டத்தரணிகளும் உள்ளடங்குகின்றனர். குறித்த பெண் பிரதிநிதிகள் அனைவரும் ஒவ்வொரு துறையில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இதற்கு முன்னர் இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஒரே தடவையில் தெரிவான பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 13 ஆகும். ஒருபோதும் நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் 6 வீதத்தை தாண்டியதாக இருக்கவில்லை.

இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 21 பெண்களுள் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டவர்கள் ஆவர். இவ்வாறு தெரிவான பெண் பிரதிநிதிகளுள் பெரும்பாலானோர் அரசியல் பின்புலமற்ற ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டவர்கள்.

1931ஆம் ஆண்டில் அப்போதைய சட்டமியற்றும் சபையாக இருந்த அரசாங்க சபைக்கு அடெலின் மொலமுரே தெரிவாகியிருந்தார். இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதல் பெண் என்ற பெருமையும் அவரையே சேரும்.

இலங்கை ஜனநாயக குடியரசில் 1989ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 வீதத்தை விடவும் குறைவாகவே இருந்தது.

இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்திற்கு அதிகளவான பெண்கள் தெரிவு செய்யப்பட்ட ஆண்டுகளாக 1989, 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளைக் சுட்டிக்காட்ட முடியும்.

குறித்த வருடங்களில் தலா 13 பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர். மேலும் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக 9 ஆவது நாடாளுமன்றத்துக்கு 12 பெண் பிரதிநிதிகள் தெரிவாகியிருந்தனர்.

ஆனால் இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 21 பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளமை மிகவும் சிறப்புக்குரியது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஹரிணி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசேகர ஆகியோர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக இருந்தார். ஆனால் ஹரிணி அந்த சாதனையும் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஹேமாலி குணசேகர களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட நிலந்தி கொட்டஹச்சி, ஓஷனி உமங்கா ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை மலையகத்திலிருந்து இம்முறை 03 தமிழ் பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கும் தேர்வாகியுள்ளமை மிகவும் விசேட அம்சமாகும்.

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட துஷாரி ஜயசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சமிந்திராணி கிரியெல்லவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

மாத்தளை மாவட்டத்திலிருந்து, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட தீப்தி வாசலகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ரோஹினி குமாரி கவிரத்னவும் தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அனுஷ்கா தர்ஷனி திலகரத்ன மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட அம்பிகா சாமுவேலும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்தில் போட்டியிட்ட ஹசாரா லியனகேவும், மாத்தறை மாவட்டத்திலிருந்து சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட நிலுஷா லக்மாலியும் சாகரிக்கா கங்காணி கேகாலை மாவட்டத்திலும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து முது ரத்வத்தே, குருணாகல் மாவட்டத்தில் கீதா ஹேரத், புத்தளம் மாவட்டத்தில் ஹிருனி மதுஷா விஜேசிங்க மற்றும் மொனராகலை மாவட்டத்திலிருந்து சதுரி கங்காணி ஆகியோரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். எவ்வாறாயினும் இம்முறை தெரிவாகியுள்ள நாடாளுமன்றம் கல்விமான்களால் நிரம்பியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.