இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிசேரியா (Caesarea) வீட்டு வளாகத்தில் 2 ஃபிளாஷ் வெடி குண்டுகள் வெடித்து சிதறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிகிழமை (16) இரண்டு குண்டுகளும் வீட்டு வளாகத்தின் தோட்டப் பகுதியில் வெடித்ததாக பொலிஸார் அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது பிரதமர் நெதன்யாகு உட்பட குடும்பத்தினர் யாரும் குடியிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குண்டு வெடிப்பின் காரணமாக எந்த பொருள் சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருந்தது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையிலான சண்டை கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போரில் பாலஸ்தீனத்தில் இதுவரை பெண்கள் குழந்தைகள் உட்பட 43,799 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தீவிரமான போருக்கு மத்தியில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கி நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.