புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்: முதல் அமர்வில் நிகழ்த்தும் அநுர

0
73

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிற்பகல் 3 மணிக்கு கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33(a) பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

இதேவேளை நாடாளுமன்றத்திற்கு தேர்வான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இரண்டு மையங்களைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் 03 நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 25, 26, 27 ஆகிய திகதிகளில் செயலமர்வு நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (16.11) வெளியிடப்படவுள்ளது. புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.