வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை: பொலிஸார்

0
25

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதுடன் தேர்தல் தொடர்பான வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அமைதியான மற்றும் சுமூகமான முறையில் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி, மன்னார் மற்றும் பியகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகும்.

இந்த சம்பவங்களைத் தவிர வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நேற்று மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடியும் வரை பதிவாகவில்லை. தேர்தல் அமைதியான முறையிலேயே நடைபெற்றது.

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மூவர் இயற்கையாக மரணமடைந்திருந்தனர். இவர்களது மரணங்களுக்கு இருதய கோளாறுகள் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் அறிய முடிந்தது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முழுமையாக இந்தப் பணி முடியும்வரை பாதுகாப்பு பேணப்படும். அதேபோன்று எதிர்வரும் ஒருவாரகாலத்துக்கு தேர்தல் சட்டம் கடுமையாக அமுலில் இருக்கும்.” என்றும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தலில் 70 ஆயிரம் வரையான பொலிஸாரும் 20 ஆயிரம் வரையிலான முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.