உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ ஹோட்டல் ஒன்று உலக கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கட்டிடமானது பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டில் காம்புஸ்டோஹான் என்ற நகரத்தில் அமைந்துள்ளது.
தனித்துவமான கட்டிடக்கலையை கொண்ட இந்த கட்டிடம் சுமார் 34.931 மீட்டர் (114 அடி 7 அங்குலம்) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட சேவல் வடிவ கட்டிடம் காம்புஸ்டோஹான் ஹைலேண்ட் ரிசார்ட்டின் (Campuestohan Highland Resort) ஒருப் பகுதியாக கட்டப்பட்டுள்ளது.
ஹைலேண்ட் ரிசார்ட்டில் குளிரூட்டப்பட்ட அறைகள், பெரிய படுக்கைகள் கொண்ட அறைகள், டிவி மற்றும் ஷவர்களுடன் கூடிய பல அறைகள் இருப்பதோடு உங்களுக்கு மறக்க முடியாத தங்குதல் அனுபவத்தை வழங்குகிறது.
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த கட்டிடம் ரிக்கார்டோ கானோ குவாபோ (Ricardo Cano Gwapo)என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கட்டிடத்திற்கான கருத்துருவாக்கம் மற்றும் திட்டமிடல்சுமார் 6 மாதங்கள் ஆனதாக ரிக்கார்டோ கானோ குவாபோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான இதன் கட்டுமான பணிகள் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி முடிவடைந்துள்ளன.
மேலும் இந்த சேவல் வடிவமைப்பானது புயல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கட்டப்பட்டு இருப்பதாகவும் கடுமையான வானிலைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்றும் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.