சமஷ்டிக்கு ஒருபோதும் இடமளியோம்: பொதுஜன பெரமுன

0
37

“ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு 29 ஆயிரம் படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். எனவே இந்த நாட்டில் சமஷ்டி கட்டமைப்பைக் ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“2015 நல்லாட்சி காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்புப் பணி இறுதிப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி அநுர வழங்கியுள்ளார். இலங்கை மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் எனவும் மாகாண சபைகளுக்குரிய அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மத்திய அரசு இரத்துச் செய்ய முடியாது. மாகாண இணைப்புக்குரிய அதிகாரமும் மாகாண சபைக்குச் செல்லும். எல்லை நிர்ணயம்கூட மாகாண சபை வசம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் உள்ளன. எனவே 2015 அரசமைப்பு அமுலுக்கு வந்தால் இலங்கை சமஷ்டி நாடாக மாறும். நாடாளுமன்ற அதிகாரம் குறையும். எனவே இதற்கு இடமளிக்கக் கூடாது.

ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்குப் படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். எனவே சமஷ்டி முறைமைக்கு இடமளிக்க மாட்டோம். தமிழ் டயஸ்போராக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் தயாரில்லை.

ஆட்சியாளர்கள் கள்வர்கள் எனக் கூறியே அநுர தரப்பு ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்னும் கள்வர்கள் பிடிபடவில்லை. இதன்மூலம் அவர்கள் கூறியவை பொய்கள் என்பது உண்மையாகியுள்ளன.” – என்றார்.