தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொள்கைகள் முரண்பாடுகளை கொண்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் தேசியமும், திராவிடமும் எப்போதும் ஒன்றாக முடியாது. விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும் எவ்வாறு ஒன்றாக முடியும்? திராவிடம் என்பது மக்களை பிளவுப்படுத்தி பார்ப்பதாகும். தமிழ் தேசியம் என்பது அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வதாகும். தமிழினம் எங்கேயாவது பாதிக்கப்பட்டால் அதற்காக கண்ணீர் வடிப்பது தமிழ் தேசியமாகும். அதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதே திராவிடம்.
சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசுவது தமிழ் தேசியம். ஆனால் அதனை பேசி அரசியல் செய்து ஏமாற்றுவது திராவிடம். எனவே திராவிட கொள்கைகளை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்கள் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். அது தம்பியாக இருந்தாலும் சரி, என்னை பெற்றெடுத்த தாய்-தந்தையாக இருந்தாலும் சரி. அவர்களும் எங்களுக்கு எதிரிதான்.
சினிமாவில் வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக முடியாதோ, அதே போன்று தான் தமிழ் தேசியமும், திராவிடமும் எப்போதுமே ஒன்றாக முடியாது.
விஜய் மாநாட்டில் கூடிய கூட்டத்தை பார்த்து நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் பிரிந்து அவருக்கு செல்லுமா என்று கேட்கிறீர்கள். நாம் தமிழர் கட்சிக்கு கூடுவது கொள்கை கூட்டம்.
நடிகை நயன்தாரா கடை திறப்புக்கு 04 லட்சம் பேர் கூடினார்கள். கூட்டம் என பார்த்தால் எனக்கு 36 லட்சம் மக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர். இரசிகர்கள் வேறு, கொள்கை போராளிகள் வேறு. விஜய் ரசிகர்கள் எனக்கு எப்படி வாக்கு செலுத்துவார்கள்?
விஜய் கட்சி கொள்கைகளில் உடன்பாடு இல்லை. எனவே அவர் கட்சியின் கொள்கைகளை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எழுதிக் கொடுப்பவர்களை மாற்ற வேண்டும். விஜய் கொள்கையை மாற்றினால் அவரை வாழ்த்துவோம்.