நவம்பர் 14 ஆம் தேதி பொதுத் தேர்தல்: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

0
23

நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் முடிவு அரசியல் சாசனத்துக்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உத்தேச திகதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது நாடாளுமன்றத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி கடந்த 21ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் சிறிலங்கா தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச். எம்.பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவதும் வாக்களிக்கும் திகதி அறிவிக்கப்பட்டமையும் தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது என குற்றம் சுமத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10வது பிரிவின்படி, வேட்புமனுக்களை கோருவதற்கான திகதி ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரையில் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது.

தேர்தல் சட்டத்தின்படி வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்குப்பதிவு திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

வேட்புமனுக்கள் ஏற்கும் பணி முடிவடைந்த அக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் நவம்பர் 29ஆம் திகதியுடன் ஏழு வார கால அவகாசம் நிறைவடையும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவதற்கும் தேர்தலை நடத்துவதற்கும் நவம்பர் 15 முதல் நவம்பர் 29 வரை சரியான நேரம் என சுட்டிக்காட்டிய மனுதாரர் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது எனவும் அது விதியை மீறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.