கனடாவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் இந்தியா

0
52

இந்திய அரசாங்கம், கனடாவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக கனடிய அரசாங்கம் வெளியிட்ட கருத்து தொடர்பில் இவ்வாறு எதிர்ப்ப வெளியிடப்பட்டுள்ளது.

சீக்கிய செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அமித்ஷா உத்தரவிட்டார் என கனடிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே கடுமையான முரண்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கனடிய அரசாங்கம் சுமத்திய இந்த குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக எதிர்த்துள்ளதுடன் இது அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என சுட்டிக்காட்டி உள்ளது.

சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்து செல்கின்றது.

இந்த நிலையில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிரான புதிய குற்றச்சாட்டு இருதரப்பு உறவுகளை மேலும் மோசமடைய செய்துள்ளது. கனடிய அரசாங்கத்தின் இந்த குற்றச்சாட்டு வன்மையாக கண்டிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பொறுப்புணர்ச்சியற்ற வகையில் பாரதூரமான குற்றச்சாட்டுகளை கனடா சமத்துவதாகவும் இது இருதரப்பு உறவுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.