அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்படாது: அவர்கள் மக்களுடன் இருக்க வேண்டும் – ஜனாதிபதி

0
43

பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 25 இற்கும் குறைவான அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையொன்றே உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான சலுகைகள் முற்றாக குறைப்படும். அமைச்சரவை 25 அமைச்சர்களுக்குள் மட்டுப்படுத்தப்படும். அமைச்சர்களை அரச ஊழியர்களாக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு கொழும்பில் வழங்கப்படும் வீடுகளும் வழங்கப்படாது.

நவம்பர் 14ஆம் பின்னர் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒவ்வொரு எம்.பி.யும் ஒரு இணைப்பாக விளங்கும் அமைச்சரவையையும் அரசாங்கத்தையும் உருவாக்குவோம்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை யார் கவனிப்பது? உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் வெள்ள அச்சுறுத்தல்களை அறிந்திருக்கிறார்கள். அவற்றுக்கான தீர்வுகளும் அவர்களிடம் உள்ளன. இந்த தேசிய தேவைகளுக்கு அவர்களின் பங்களிப்பை நாம் பெற வேண்டும்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்களுக்கு நெருக்கமான தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்களுடன் நேரடியாக இணையும் அரசாங்கமே தேவை. தலைவர்கள் தொலைதூரத்தில் இருப்பதை விட உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க தங்கள் மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும்.

கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு கொழும்பில் தங்கியிருக்கும் தலைவர்கள் எமக்கு தேவையில்லை. அதனால் தான் எந்தவொரு அமைச்சருக்கும் கொழும்பில் வீடு வழங்கப்படாது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்கள் கிராமங்களுக்கு அடிக்கடி வந்து கிராம மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சித் திட்டம் மக்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

அதற்கு ஏற்ற அரசை உருவாக்கி வருகிறோம். இலங்கையில் கடந்த காலங்களில் இவ்வாறான அரசாங்கங்கள் அமைக்கப்படவில்லை. இலங்கையின் அபிவிருத்தியில் அனைவரும் அங்கம் வகிக்க வேண்டும்.” என்றார்.