தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் முதலாம் திகதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுபற்றி சர்வதேச விவகாரங்களுக்கான மேயர் அலுவலக துணை ஆணையாளர் திலீப் சவுகான் கூறுகையில்,
இந்த வருட தீபாவளி சிறப்பானது. நியூயார்க் நகர வரலாற்றில் முதன்முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரவிருக்கின்ற வெள்ளி கிழமையன்று பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். நியூயார்க் நகரில் 11 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
அதனால் தீபாவளியன்று நகரில் பொது விடுமுறையை அறிவிப்பது என்பது எளிதல்ல. பல ஆண்டுகளாக சமூக தலைவர்கள் பலர் இதற்கான இயக்கம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இறுதியில் மேயர் எரிக் ஆடம்ஸ் நிர்வாகத்தின் கீழ் பள்ளி விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்றார். இதற்காக மேயர் ஆடம்சுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருக்கிறோம்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படும். தீபாவளி தினத்தில் அவர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.
அதனால் மாணவர்களுக்கு, அன்றைய தினம் கோவிலுக்கு செல்வதா? அல்லது பள்ளிக்கு செல்வதா? என்ற நெருக்கடி இந்த ஆண்டில் இருக்காது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து, அமெரிக்கா முழுவதிலும் உள்ள இந்திய-அமெரிக்கர்களை இதில் கலந்து கொள்ள வருகை தரும்படி அழைப்பும் விடுத்துள்ளார்.
அதுபற்றிய புகைப்படங்களை வெள்ளை மாளிகை பகிர்ந்து கொண்டுள்ளது. அதில் வெள்ளை மாளிகையில் இருந்து தீபாவளி வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.