பதுளை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க சில சதித்திட்டங்கள் நடந்து கொண்டிருப்பதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் ஹாலியெல கபில தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் கள நிலவரங்கள் தொடர்பில் பல விடயங்களை தெளிவுப்படுத்தியிருந்தார். அதன்போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கள நிலைமை நன்றாக இருக்கின்றது. எனினும் சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் எங்களை தோற்கடிப்பதற்கு, பதுளை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க சில சதித்திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
சில பேர் கங்கனம் கட்டி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதியை தோற்கடிக்க வேண்டும் என்று பதுளை மாவட்ட மக்களை அரசியல் அநாதைகளாக மாற்ற வேண்டும் என்று சிலர் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனினும், வடிவேல் சுரேஷ் இருக்கும் வரை அது நடக்காது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. சிலர் தங்கள் தோல்வியடைவோம் என தெரிந்தும் வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் நோக்கம் வாக்குகளை சிதறடிப்பது மட்டும் தான் இன்று பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது.
மக்கள் அவர்களை விரட்டுகிறார்கள் அதனால் அவர்கள் தோட்ட மக்களிடம் வந்து வாக்குகளை சேகரிக்க வருகிறார்கள். ஆனால் தோட்ட மக்களின் வாக்குகள் குறைவாகவே இருக்கிறது. முஸ்லிம் மக்களின் வாக்குகளும் குறைவாகவே இருக்கிறது.
இதனையும் அவர்கள் பங்குப்போட்டால் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு நாங்கள் அரசியல் அநாதைகளாக மாறிவிடுவோம். ஆனால் பதுளை மாவட்டத்தில் வடிவேல் சுரேஷ் இருக்கும்வரை யாரையும் அரசியல் அநாதைகளாக மாற இடமளிக்க மாட்டேன்.
எங்களுக்கு வெற்றிப் பெற கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது ஆகையால் யாரும் இவர்களின் சதிவலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம்” என தெரிவித்தார்.