தேர்தல் வாக்குறுதிகளை மீறிய அநுர; சஜித் பிரேமதாச கண்டனம்

0
62

தற்போதைய ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிர்க்கதிகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தி வரும் மக்களுக்குத் தேர்தலில் வாக்குறுதியளித்தபடி அழுத்தங்களைக் குறைப்பதாக தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்தது.

ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அனுரகுமார திஸாநாயக்க கூறியது போல் ஆட்சி வந்தும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அவரால் குறைக்க முடியாது போயுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து உடன்படிக்கையை மாற்றியமைப்பேன் என்று தெரிவித்தார். இருந்த போதிலும், அவரால் இன்று அதனை மாற்றியமைக்க முடியாது போயுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2028 ஆம் ஆண்டு முதல் கடனை அடைப்பதாக முன்னாள் ஜனாதிபதி நாட்டையே சிக்கலில் தள்ளியுள்ளார். இதற்கு இன்னும் நான்கு வருடங்கள் மட்டுமே உள்ளது. தற்போதைய பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு இந்த கடனை செலுத்த முடியாது.

இதற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியமாகும். அவ்வாறு இல்லை என்றால் 2028 ஆம் ஆண்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.