உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை இதுவரையில் உதய கம்மன்பில மறைத்து வைத்த காரணத்தினால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் கே.டீ. லால்காந்த வலியுறுத்தியுள்ளார்.
அவர்கள் கூச்சலிட்டாலும் இல்லையென்றாலும் ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம், சமய அமைப்புகள் அது தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக கே.டீ. லால்காந்த தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கைகளில் ஒன்றை உதய கம்மன்பில கடந்த 21ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்களை மறைத்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் குற்றம் சுமத்திய அவர் அவ்வாறு செய்தமைக்காக உடனடியாக நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.