மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மாநகர முதல்வரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான தி.சரவணபவன் (T. Saravana Bhavan) எமது கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் அரியநேத்திரனைப் (P. Ariyanethiran) பற்றி விமர்சிப்பதற்கு அருகதையற்றவர் என இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மார்க்கண்டு நடராசா (M. Nadarajah) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள் சென்று வருகின்ற இடங்களில் எல்லாம் கணிசமான மக்கள் நிச்சயமாக தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதாக எனக்கு உறுதி தந்திருக்கின்றார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலிலே சங்கு சின்னத்திற்காக நாங்கள் செயற்பட்டோம். ஏனெனில் தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக தமிழர்களை ஒன்றாக அமைத்து தமிழினத்தின் விடுதலைக்காக தமிழினம் ஒத்தி இயங்குவதற்காகவும் நாங்கள் சங்கு சின்னத்தை ஆதரித்திருந்தோம். அது சிங்கள தேசியத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான ஒரு தேர்தலாகும்.
இந்த நாட்டிலேயே கடந்த காலங்களாக இந்த சிங்கள தேசியவாதிகள் எமது தமிழர்களுக்கு செய்த இன்னல்கள், தடைகள் மற்றும் இடைஞ்சல்களை நாங்கள் இந்த சமூகத்தின் பால் ஒருமித்து கேட்பதற்கான ஒரு வழியை தேடித்தான் நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் சங்கை ஆதரித்தோம்.
நான் இன்றும் தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் எனது கட்சியில் கடந்த காலங்களில் குழப்ப நிலைகள் ஏற்பட்டன. அதற்காக வேண்டி மக்கள் மத்தியில் நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். நமது கட்சியின்பால் உள்வீட்டு பிரச்சினைகள் அதிக அளவு இருக்கின்றன.
இருந்தாலும் அதனை விடுத்து நாங்கள், எமது சின்னம் வீடு அதற்கான வாக்குகளை வழங்குங்கள் என்ற அடிப்படையில் மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் அளித்து பிரசாரம் செய்து வருகின்றோம்.
ஊழலற்ற நேர்மையான புத்திஜீவிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என மக்கள் கூறுகின்றார்கள் அது வரவேற்கத்தக்க விடயம். எமது மக்களின் பிரச்சினைகளை உணர்ந்தவர்கள் அறிந்தவர்கள் வலிகளை சுமந்தவர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.
எமது வலிகளையும் பிரச்சனைகளையும் அறியாதவர்களை அனுப்புவதால்தான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இம்முறை நடைபெற இருக்கின்ற தேர்தலில் எனது கட்சியில் எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் எட்டு வேட்பாளர்களும் வெற்றி பெறக்கூடிய சாத்தியமில்லை இருந்தாலும் அதில் மூன்று அங்கத்தவர்கள் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
அதன் அடிப்படையில் மக்கள் எட்டு பேரில் ஒப்பீடு செய்து கடந்த கால நடவடிக்கைகள் நிகழ்கால நடவடிக்கைகளையும் அவதானித்து மூன்று பேருக்கு மக்கள் வாக்களிக்கலாம்.
மக்களுக்காக சேவை செய்கின்றவர்களாகவும் தடம் மாறாத தமிழ் தேசியத்தை விட்டுப் போகாத மாற்று கட்சிகளுக்கு பேரம் போகாத உண்மையிலேயே மானமுள்ள தமிழர்களை தெரிவு செய்ய வேண்டும்.
தி.சரவணபவன் எமது கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் அரியநேத்திரனைப் பற்றி விமர்சிப்பதற்கு அருகதையற்றவர். அவர் கடந்து வந்த பாதைகளை விளங்கிக் கொண்டிருந்தால் இவ்வாறான கதைகளை பரப்பமாட்டார். அரியநேத்திரன் தேசியத்தின்பால் தடம் மாறாமல் மக்களோடு மக்களாக நின்று தமிழுக்காக தன்னை முற்றாக அற்பணித்து செயல்படுகின்ற ஒரு செயல் வீரன்.
அவ்வாறானவரை விமர்சிப்பதன் காரணமாக சிலவேளை தமிழரசு கட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள்கூட சிதறடிக்கப்படலாம். இவ்வாறானவர்கள் கூறுகின்ற பேச்சினால் தான் தமிழரசு கட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்கில் வீழ்ச்சி ஏற்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தெரிவு பிழையான முறையில்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. ஏனெனில் நானும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தேன்.
எனது பெயரைக்கூட வேட்பாளர் பட்டியலில் உள்வாங்காமல் விட்டுள்ளார்கள். அதற்குரிய காரணத்தை இயன்றவரையில் எனக்கு எனது கட்சியினால் அறிவிக்கப்படவில்லை. அத்தோடு மக்கள் என்னிடம் ஏன் நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கவில்லை என கேட்கின்றார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நபர்களைத் தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவிக் குழுவில் வேட்பாளரை தெரிவு செய்வதற்கு வேட்பாளரே அக்குழுவில் நீதிபதியாக இருந்துள்ளார். இது ஒரு ஜனநாயகமான முறையா? வேட்பாளரை தெரிவு செய்வதற்கு இன்னும் ஒரு வேட்பாளர் தெரிவிக் குழுவில் இருக்கின்றார் என்றால் அது சரியான முறையில் தெரிவு நடைபெற்று இருக்காது. அதன் அடிப்படையில்தான் இந்த தெரிவுக்குழு கூட முறையாக இடம்பெறவில்லை என கூறுகின்றேன்.
தற்போது பெண் ஒருவர் வேட்பாளராக தேர்வு போட்டியிடுகின்றார். அவரை எனக்கு யார் என்று கூட தெரியாது. இவ்வாறானவர்களை என்ன விதத்தில் தெரிவு செய்தார்கள் என்பதை எனக்குத் தெரியாது எனவே கட்சி முக்கியமா வெற்றி முக்கியமா என்று குறிப்பிட்டு கூற முடியாது இருக்கின்றது.
ஆகவே போட்டியிடுகின்ற எட்டு பேரும் தமிழ் தேசியத்தின்பால் செல்கின்றார்களா என்பதை அவர்கள் மனச்சாட்சி தொட்டு சொல்ல வேண்டும். எனவே அவர்களின் தரமானவர்களை மக்கள் மூன்று பேரை தெரிவு செய்ய வேண்டும் அது மக்களுக்கு நன்கு தெரியும்.
எனவே மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் நாம் எதிர்பார்க்கின்றோம். நாடாளுமன்றம் செல்பவர்கள் சிறந்த தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடியவராகவும் புத்தி ஜீவியாகவும் இருக்க வேண்டும் என்பதையும் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் அடிப்படைக் கொள்கையான தமிழ் தேசியம் என்பதை விற்றுவிடாமல் நேரடியாக தேசியத்தின் பால் நின்று செயல்படக்கூடிய செயல் வீரர்களைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.