பிரித்தானிய மன்னர் சார்லஸ் அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவின் பூர்வீக சமூகத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மன்னருக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
தனது விஜயத்தின் ஒரு பகுதியாக் மன்னர் சார்லஸ் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று உரை ஆற்றியிருந்தார். இதன்போது செனட் சபையின் பெண் உறுப்பினரான லிடியா தோர்ப், காலனித்துவ ஒழிப்புக்கான கோஷங்களை மன்னருக்கு எதிராக எழுப்பினார்.
ஆவேசத்துடன் மன்னர் சார்லசை நோக்கி எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். அதனை திருப்பி கொடுங்கள். எங்களிடம் இருந்து திருடியவற்றை எங்களிடமே திருப்பி தாருங்கள்.
இது உங்களுடைய பூமி அல்ல. நீங்கள் என்னுடைய அரசரும் அல்ல” என்று லிடியா தோர்ப் சத்தமாக கூச்சலிட்டார். இது அங்கிருந்த அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் மன்னரை நோக்கிச் சென்ற லிடியாவைப் பாதுகாவல் அதிகாரிகள் தடுத்து உடனடியாக நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
எவ்வாறாயினும் அந்தச் சம்பவத்தைப் பற்றிய எந்தக் சலசலப்பும் இல்லாமல் விழா நிறைவுற்றதுடன் அரச தம்பதிகள் தங்களை வரவேற்க வெளியே காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களைச் சந்தித்தனர்.
அவுஸ்திரேலியா ஒரு பொதுநலவாய நாடாகும், இங்கு மன்னர் அரச தலைவராக பணியாற்றுகிறார் எவ்வாறாயினும் அந்த பதவியில் இருந்து மன்னரை நீக்குவது குறித்த விவாதம் அண்மைய காலமாக தலைதூக்கியுள்ளது.
முன்னதாக மன்னர் சார்ல்ஸ் நேற்று காலையில் போர் நினைவாலயத்துக்குச் சென்றபோது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் 20 பேர் பங்கேற்றனர். அதில் லிடியாவும் பங்கெடுத்திருந்தார்.
இதேவேளை லிடியா தோர்ப் 2022ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும்போது அப்போது அவுஸ்திரேலியாவின் தலைவராக இருந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.