இலங்கைத் தீவை தூய்மையான நாடாக மாற்றும் ‘தூய்மையான இலங்கை’ (clean sri lanka) திட்டத்தை அமுல்படுத்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன் அவர் மேலும் கூறியதாவது,
”சுற்றுசூழல் மாத்திரமல்ல பொதுக் கழிவறைகளும் சுத்தமாக்கப்படும். ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தை அமுல்படுத்த விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்படும்.
இதற்காக விசேட நிதியமொன்று அமைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் உட்பட பலரிடம் இதற்காக ஆதரவும் கோரப்படும். பாதைகள், ஆறுகள், பொது இடங்கள் என முழு இலங்கையும் இத்திட்டத்தின் ஊடாக சுத்தமாக்கப்படும். ஆசியாவில் சுத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே எமது திட்டம். அதற்காகவே பணியாற்றுகிறோம்.
சுத்தமான கழிவறைகள், சுத்தமான பஸ் தரிப்பிடங்கள், சுத்தமாக ரயில் நிலையங்கள், சுத்தமான பஸ்கள், சுத்தமான ரயில்கள் என முழு இலங்கையும் சுத்தமாக்கப்படும் என்பதுடன், நபர்கள் மற்ற நபர்களை புன்னகையுடன் வரவேற்றுக்கும் சூழலையும் உருவாக்குவோம். ஆகவே, சுத்தமான சூழல் மாத்திரமல்ல சுத்தமான மனிதர்களும் உருவாக்கப்படுவர்.
இலங்கை வரலாற்றில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக 2025ஆம் ஆண்டை மாற்றுவோம். நாம் எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாட்டுக்கு வருகைதர வேண்டும் என்றால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் விமான நிலையத்தை விரிவாக்க வேண்டும்.
ஜப்பான் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது முனையத்தை உருவாக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. நாம் ஜப்பான் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். மிகவும் குறுகிய காலத்திற்குள் இத்திட்டத்தை முடித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்க உள்ளோம்.
எதிர்வரும் இரண்டு, மூன்று வருடங்களில் வினைத்திறன்மிக்க அரச சேவையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கும். நாட்டை மீள உருவாக்கும் எமது திட்டத்தை எவராலும் நிறுத்த முடியாது.” என்றார்.