இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

0
36

”அதிகாரப்பகிர்வையும் 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும் அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.”

– இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால் இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச் சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ‘ஒருவன்’ பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன் மேலும் அவர் வலியுறுத்தியதாவது,

”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால் இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது.

வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும்.

13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது.

இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால் இந்தியாவை பகைத்துத் கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார்.