வேட்புமனுக்களுடன் சொத்துப் பொறுப்புக்களை பொறுப்பேற்க வேண்டும்: அதிகாரிகள் அசௌகரியம்!

0
15

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் வேட்புமனுக்களுடன் சொத்து பொறுப்புக்களையும் ஒரே தடவையில் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தேர்தல் அதிகாரிகள் பாரிய அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வரவேற்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல சுயாதீன கட்சிகளில் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஆயிரக்கணக்கான வேட்பாளர்களின் சொத்து பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளமை அதற்கான காரணம் என தேர்தல் கடமைகளில் நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு இல 9 ஊழல் மோசடி எதிர்ப்பு சட்டத்தின்படி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வேட்பாளர்கள் தமது சொத்து பொறுப்புக்களை முன்னிலைப்படுத்துவது கட்டாயம் என்பதோடு வேட்புமனுக்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைக்கவும் வேண்டும்.

சட்டத்தின்படி தேசியப் பட்டியலின் மூலம் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்புமனுக்களுடன் சொத்து பொறுப்புக்கள் தொடர்பிலான அறிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு ஒப்படைக்கப்படும் போது சொத்துப் பொறுப்புக்களுடன் அதிகளவிலான கடதாசிகள் இணைக்க அவற்றை பொறுப்பேற்கும் போது அதிகாரிகள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக குறித்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

குறைந்தது வேட்புமனுக்களை வழங்கி ஒரு வாரத்திற்குள் சொத்துப் பொறுப்புக்களை வழங்க சந்தர்ப்பம் வழங்கப்படின் இவ்வாறான ஒரு நிலை ஏற்படாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

சட்டத்தில் உள்ளவாறு சொத்துப் பொறுப்புக்களை பொறுப்பேற்க வேண்டியிருந்தாலும் நடைமுறையில் அது கடினமான விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

நடைமுறை தொடர்பில் சிந்திக்காது செயற்படுவது இதற்கான முக்கிய காரணம் என தெரிவித்த அவர் இதனால் அதிகாரிகள் மட்டுமன்றி வேட்பாளர்களும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

வேட்புமனுவுடன் சொத்து பொறுப்புக்களை வழங்கத் தவறுகின்றமை தண்டனைக்குரிய ஒரு குற்றம் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.