முன்னாள் எம்.பிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி அனுர

0
61

அரச வீடுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்காவிட்டால் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அனுர அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நீதி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அரசாங்க வீடுகளை உடனடியாக கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பல நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும் நேற்று வரை 11 பேரே வீடுகளை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களுக்கு அரசாங்க வீடுகளை வழங்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 7 பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 40 ஆகும். இதனால் இதுவரை ஒப்படைக்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 29 ஆகும்.

இதேவேளை அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்குவதில் செலவினங்களை குறைக்கும் வகையில் அனைத்து விடயங்களையும் மீளாய்வு செய்து புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அனுர அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளது