சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் சுமார் 4000 வாகனங்கள் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தேசிய கணக்காய்வு அலுவலகம் அனைத்து அரச வாகனங்களும் உள்ளடங்கும் வகையிலான விசேட கணக்காய்வை நேற்று (27) ஆரம்பித்துள்ளது.
இந்த கணக்காய்வின் பின்னர் காணாமல் போயுள்ள அல்லது இடம்பெயர்ந்துள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் சம்ரப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தின் கணக்காய்வாளர் டப்ள்யு . பீ. சீ. விக்கிரமரத்ன தெரிவித்தார்.
கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் விட்டுச் செல்லப்பட்ட 110 அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் ஆராய விசேட கணக்காய்வு குழு ஒன்றை அங்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் குறித்த வாகனங்களை உண்மையிலேயே பயன்படுத்தியவர்கள் யார் என்பதை ஆராய தகவல் திரட்டும் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவற்றுள் 649 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் ஆகும்.
இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சுக்கு சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான 880 வாகனங்கள், தபால் திணைக்களத்துக்கு சொந்தமான 45 வாகனங்கள் காணாமல் அல்லது இடம்பெயர்ந்துள்ளதாக கணக்காய்வு விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு தகவலே அறியாத அரச வாகனங்களின் எழுத்து மூல விபரங்கள் கூட காணாமல் போயுள்ள காரணத்தினால் வாகனங்கள் தொடர்பில் ஆராய்வது பெரும் சவாலாக மாறியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.