வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களே பல கட்சிகளில் இருந்து தமிழ் தேசிய அரசியலை தோற்கடிப்பதற்காக பல முயற்சிகளையும் பல பிரச்சாரங்களையும் செய்தபோதும் அவர்களை முறியடித்து இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்திருப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பிரிந்து இருந்தாலும் கருத்து முரண்பாடுகள் காரணமாக சில பிரசாரங்களை மேற்கொண்டாலும் கூட இனிவரும் காலங்களில் அந்த முரண்பாடுகளை தவிர்த்து பாராளுமன்றத் தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஒரு ஒரு சின்னத்தில் போட்டியிடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற பகிரங்க அழைப்பினையும் விடுத்தார். மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் பதவி ஏற்றார். அவருக்கு வேட்பாளர் என்ற சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பொதுக் கட்டமைப்பாக சிவில் அமைப்புகளும் தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக என்னை நிறுத்தியதுடன், இரண்டு இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை மக்கள் எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு இந்த மக்களுக்கு முதற்கண் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனாதிபதி தேர்தல் 1978 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பின் பிரகாரம் கொண்டு வரப்பட்டு 1982 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அந்த 9 ஜனாதிபதி தேர்தல்களில் பல தமிழர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள். குமார் பொன்னம்பலம் 1982 ஆம் ஆண்டு போட்டியிட்டிருக்கின்றார்.
அதன் பின் சிவாஜிலிங்கம் அவர்கள் இரண்டு முறை போட்டியிட்டு இருக்கிறார். அவர் தனி வேட்பாளராக போட்டியிட்டாலும் இம்முறை தேர்தலில் ஒரு பொதுவேட்பாளராக பலரின் முயற்சியின் காரணமாக தமிழ் தேசிய கட்சிகளின் அரசியலில் மையப்படுத்தி இந்த தேர்தல் இடம்பெற்றது.
அதனடிப்படையில் என்றும் இல்லாதவரை இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் என்கின்ற வகையில் தமிழ் தேசியம் தொடர்ச்சியாக இறுதிப்பதற்காக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். இணைந்த வடகிழக்கில் உறுதியாக இருக்கின்றார்கள். இணைந்த வடகிழக்கு தான் தமிழர்களின் அரசியல் தீர்வு என்பதனை இந்த தேர்தல் வெளிக்காட்டி இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற என்னை இந்த தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தியபோது, கிழக்கு மாகாணத்தை விட வட மாகாணத்தில் மக்கள் அதிகூடிய வாக்குகளை அளித்திருக்கின்றார்கள். அதில் விசேடமாக அவர்களுக்கு நன்றி கூறக்கூடியவர்களாக இருக்கின்றோம். பொது வேட்பாளரை தோற்கடிப்போம் என்று கூறியவர்களை நாங்கள் வென்றிருக்கின்றோம்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவிடம் நாங்கள் சில செய்திகளை கூற விரும்புகின்றோம். அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் விடயங்களை பார்க்கின்றபோது கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இனவாத நடவடிக்கைகளை பல முரண்பட்ட கருத்துக்களை கூறியிருந்தாலும் கூட தற்போது ஒன்பதாவது ஜனாதிபதியாக அவர் பதவியேற்று இருக்கின்றார்.
உண்மையில் இணைந்த வட கிழக்கில் ஒரு அரசியல் தீர்வை தருவதற்கான அந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேற்கொள்வார் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளருக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு கிடைத்தது தமிழ்த் தேசியத்திற்கு கிடைத்த வெற்றியாக இருக்கின்றது.