40 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது: பணிக்குத் திரும்புவதாக மருத்துவர்கள் அறிவிப்பு

0
248

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருத்துவர்கள் பணி நிறுத்தத்துடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி இளநிலை மருத்துவர்களின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவர் மூன்று நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து இளநிலை மருத்துவர்கள் மேற்கொண்ட ஆலோசனையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரையில் பணி நிறுத்தம் தொடரும் எனவும் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேற்குவங்க அரச அதிகாரிகளுக்கும் இளநிலை மருத்துவர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே வேலை நிறுத்தத்தை தொடரவுள்ளோம் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் பணி நிறுத்தத்தை மீளப் பெறுவதாக (வாபஸ்) பெறுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் நாளை சனிக்கிழமை 21ஆம் திகதி அவர்கள் பணிக்குத் திரும்புகிறார்கள்.

இதுதொடர்பில மருத்துவர்கள் கூறுகையில், “வெள்ளப்பெருக்கு பிரச்சினை உள்ளது. நமக்கு உறுதுணையாக நின்றவர்கள் ஏதேனும் பேரிடரால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ வேண்டியது எம் கடமை. எனவே போராட்டக் களத்தை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளோம்” எனக் கூறியுள்ளனர். 40 நாட்களுக்கும் அதிகமாக நடந்த மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.