இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயம் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவர் மேலும் தரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நிலை சிங்கள மக்கள் மத்தியில் சஜித்திற்கான ஆதரவினை குறைக்கும் நடவடிக்கையாகும்.
சஜித் பிரேமதாச சிங்கள தேசிய வாதத்திற்கு நேர்மையாக நடந்து கொள்வார் என்னும் நிலைப்பாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி அவரது தென்னிலங்கை வாக்குகளை ரணிலின் பக்கம் திரும்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் வடக்கு கிழக்கினைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடையாது. எனினும் இந்த நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் எற்படுத்தப்போவதில்லை.
ஆனால் தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு குழப்பத்தினை ஏற்படுத்தும்.
ஆகவே நாம் இவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் இன்று தமிழ்த் தேசியத்திற்கு நேர்மையாக கொடுக்கக்கூடிய ஒரு நேர்மையான வழி தேர்தலைப் பகிஸ்கரிப்பது மட்டுமே.
எனவே 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.