இன்று நான் மாத்திரமே உயிரோடு இருக்கிறேன்: நுவரெலியாவில் ரணில் தெரிவிப்பு

0
87

பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்கி சட்டபூர்வமான காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க இடமளிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி படிப்படியாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அடுத்த ஐந்து வருடங்களில் இந்த நாட்டில் பாரிய பொருளாதார, அரசியல், சமூக புரட்சியை ஏற்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

சஜித்தும் அநுரவும் மாற்றங்களை செய்வதாகச் சொன்னாலும், முகங்களை மாற்றும் மாற்றம் நாட்டுக்கு அவசியமற்றதெனவும், மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாக இருந்தால் வரிசையில் நின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான மாற்றத்தில் அன்றே இணைந்திருப்பார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி, வரிச்சுமையை குறைப்பதாக சஜித் போலி வாக்குறுதிகளை வழங்கினாலும், இதுவரையில் எவரும் பேசவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மறுசீரமைப்புக்களால் ஏற்பட்டிருக்கும் வெற்றிகளைப் பாதுகாக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“1973களில் முதலில் நுவரெலியாவிற்கு வந்தேன். காமினி திசாநாயக்க, ஜே.ஆர் ஜயவர்தன, ஆர். பிரேதமதாச, லலித் அத்துலத்துமுதலி போன்ற தலைவர்களுடன் வந்திருக்கிறேன்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைத்து பாரிய வெற்றியை கண்டோம். அவர்களில் இன்று நான் மாத்திரமே உயிரோடு இருக்கிறேன்.

அதனாலேயே ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்குச் சிறப்புச் செய்தியொன்றை சொல்ல வேண்டும். இலங்கையில் ஒரேயொரு ஐக்கிய தேசிய கட்சியே உள்ளது. அதன் தலைவரான எனக்கே ஐக்கிய தேசிய கட்சியினர் ஆதரவளிக்க வேண்டும்.

நானும் சௌமியமூர்த்தி தொண்டமானும், ஒரே நாளில் தான் அமைச்சு பதவியேற்றோம். அவரோடு இணைந்து தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கிறேன். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தோம். 1986 களில் இந்திய வம்சாவளி மக்களுக்கு வாக்குரிமை வழங்கினோம்.

1994 இல் நுவரெலியா வந்தபோது தோட்டங்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுத்தேன். புதிய தோட்டங்களை அமைத்தோம். பின்னர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து ஏனையோருக்கும் பிரஜாவுரிமை வழங்கினேன்.

நான் பிரதமராக இருந்த காலத்தில் உள்நாட்டு விவகார அமைச்சராக இருந்த வஜீர அபேவர்தனவுடன் இணைந்து இப்பகுதியிலுள்ள பிரதேச சபைகளை அதிகரிக்குமாறு கூறினேன்.

பின்னர் ஜீவன் தொண்டமானுடன் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். தோட்டத்தில் முதியவர்களுக்கு அஸ்வெசும நிவாரணம் தருகிறோம்.

லயன்களை ஒழித்து கிராமங்களை உருவாக்குவோம். பிராஜவுரிமையை முழுமையாக வழங்க வழி செய்திருகிறோம்.” என மேலும் தெரிவித்துள்ளார்.