தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சியடை செய்யும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க பதிலளித்துள்ளார்.
மருந்துப் பற்றாக்குறை, வேலையின்மை, தொழில் வாய்ப்புகளுக்காக இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுதல் போன்ற முக்கியமான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, பொருளாதாரம் ஏற்கனவே சரிந்துவிட்டது என கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா எனத் தாம் கேள்வி எழுப்பி, 03 நாட்களாகியும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாம் ஏற்கனவே வைத்தியசாலைகளில் மருந்து இல்லாத நாடாக இருக்கிறோம், இளைஞர்களுக்கு வேலையில்லை, மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளனர், விவசாயத்தில் வருமானம் இல்லை, கடனை திருப்பி செலுத்த முடியாமல் தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த பொருளாதாரத்தை தான் ரணில் கட்டியெழுப்ப போகிறாரா? இந்த பொருளாதாரம் இனி வீழப்போவதில்லை அது ஏற்கனவே வீழ்ந்துவிட்டது என்றார் அனுரகுமார.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவது அதை மேலும் கீழே தள்ளுவதற்காக அல்ல சரிந்த தேசத்தை மீண்டும் மேலே உயர்த்துவதற்காக. சிதைந்து வரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது கட்சியின் குறிக்கோள் ரணில் விக்கிரமசிங்க 12.5 பில்லியன் டொலர் இறையாண்மைக் கடனைக் குவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதிலிருந்து தற்போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விலகியிருந்தாலும் அவர் அதனை அங்கீகரித்துள்ளார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரேமதாச ஆகிய இருவருமே காரணம் என்பதை பொதுமக்கள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.