போர்த்துகல் அணியின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு விளையாடு கடைசி கழகமாக சவுதி அரேபியாவின் அல் நாசர் கழகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் மன்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறிய பிறகு, 2023 ஜனவரியில் சவுதி புரோ லீக் அணியான அல் நாசரில் இணைந்து கொண்டார்.
இந்நிலையில் போர்த்துகல் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய அவர்,
“இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நான் ஓய்வு பெறுவேனா என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் அல்-நாசரில் இருந்து ஓய்வு பெறுவேன்.
“நான் இந்த கழகத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த நாட்டிலும் நான் நன்றாக உணர்கிறேன், சவுதி அரேபியாவில் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆகையினால் தொடர்ந்தும் விளையாட விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை 899 கோல்கலை அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் (Goal) என்ற மைல்கல்லை எட்டுவதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இன்னும் ஒரு கோல் மாத்திரமே தேவைப்படுகின்றது.
நேற்று நடைபெற்ற சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் ஃபெய்ஹா அணிக்கு எதிராகக் கோல் (Goal) ஒன்றினை பெற்ற நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 899 கோல்களைப் பதிவு செய்தார். எவ்வாறாயினும், அவர் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட ஆர்வமாக இருப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.
“நான் தேசிய அணியை விட்டு வெளியேறும்போது, நான் யாரிடமும் முன்கூட்டியே சொல்ல மாட்டேன். அது எனது தன்னிச்சையான முடிவாக இருக்கும், மிகவும் நன்றாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
“இப்போது நான் விரும்புவது தேசிய அணிக்கு வரவிருக்கும் போட்டிகளில் பங்களிப்பதாகும். விரைவில் நேஷன்ஸ் லீக் தொடர் ஆரம்பமாகவுள்ளது. அதில் நாள் நான் உண்மையில் விளையாட விரும்புகிறேன்.”
இதன்படி, எதிர்வரும் ஐந்தாம் திகதி குரோஷியாவை எதிர்த்து போர்த்துகல் விளையாடவுள்ளது. 12ஆம் திகதி போலந்து அணிக்கு எதிராகவும், 15ஆம் திகதி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.
எவ்வாறாயினும், ஓய்வு பெற்றவுடன் மேலாளராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.