வாக்குகள் குறைந்து விட்டதை பகிரங்கமாக ஒப்புக் கொண்ட ராஜபக்ச தரப்பு: சஜித் வெற்றி பெறலாம் என்கிறாரா திஸ்ஸ?

0
65

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் குறைந்து விட்டதை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைக்கப்பெற்ற 69 இலட்சம் வாக்குகளில் தற்போது 40 இலட்சம் வாக்குகள் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் அதிலிருந்தே நாமல் ராஜபக்ச ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலில் அவசரப்படக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டிருந்தது. ரணிலுக்கு மறுபடியும் மொட்டுக் கட்சியின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக ரணில் விக்கிரமசிங்க சுயாதீனமாக களமிறங்குவதாக அறிவித்த பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தம்மிக்க பெரேராவை நியமிப்பதாக தெரிவித்து இறுதி தருணத்தில் அவர் பின்வாங்கிய காரணத்தினால் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வாக்குகள் குறைவடைந்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

அதன்போது 69 இலட்சம் வாக்குகள் தற்போது உங்களிடம் இருக்கின்றனவா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எங்களுக்கு ஒரு கட்சியாக உறுதியாக 69 இலட்ச வாக்குகள் தற்போது இல்லை, அதிகளவிலான வாக்குகள் விலகி சென்றுள்ளதாவும் திஸ்ஸ குட்டியாராச்சி பகிரங்கமாக தெரிவித்தார்.

அவற்றுள், சுமார் 9 இலட்சம் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கும், சுமார் 10 இலட்சம் வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கும், சுமார் 10 இலட்சம் வாக்குகள் ரணிலுடன் இணைந்திருக்கும் குழுக்களுக்கும் தற்போது காணப்படுகின்றன. ஆகவே, தற்போது சுமார் 40 இலட்சம் வாக்குகளுடன் தற்போது நாமல் ராஜபக்ச முன்னிலையில் உள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு ரணில் தரப்புக்கு சென்றவர்களுக்கு தற்போது பயம் ஏற்பட்டிருக்கும். நாமல் ராஜபக்சவை நியமித்த பின்னர் கட்சித் தாவியவர்கள் மறுபடியும் பொதுஜன பெரமுனவுடன் இணைய வாய்ப்புண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் கால அவகாசம் காணப்படுவதால் வேட்பாளரை சரியான தருணத்தில் தெரிவித்தது போல் கட்டுப்பணமும் சரியான நேரத்தில் செலுத்தப்படும் அதன் பின்னர் 16ஆம் திகதி தொடக்கம் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்படும் என திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.