போராட்டம், கண்ணீர், மிரட்டல் என பல்வேறு தடைகளை கடந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வந்த வினேஷ் போகத்திற்கு முதல் சுற்றே சவாலானதாக இருந்தது.
காரணம் 4 முறை ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன், சர்வதேச போட்டிகளில் 82 முறை விளையாடி ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காத ஜப்பான் வீராங்கனை யுகி சாசாகி (Yui Sasaki) ஐ எதிர்த்து விளையாடினார்.
இதுவரை தோல்வியே சந்திக்காத யுகி சாசாகியை இறுதி வினாடியில் வீழ்த்தி மீண்டும் புதிய வரலாற்றை உருவாக்கி காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ்.
காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டு வீராங்கனை லிவாக்ஞ் (LIVACH) யை எதிர்கொண்ட வினேஷ் 7க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதிகரித்த உடல் எடை
இந்நிலையில் நேற்றைய தினம் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டமையானது தற்போது இந்திய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நேற்று மாலை 2 கிலோ கூடுதலாக உடல் எடை இருந்த நிலையில் இரவு முழுவதும் சாப்பிடாமல் தூங்காமல் விடிய விடிய உடற்பயிற்சி செய்துள்ளார்.
இவ்வளவு சிரமத்துக்க மத்தியில் காலையில் சுமார் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு சற்றுமுன்னர் விளக்கமளித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு
29 வயதான வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு குரல் எழுப்பி இருந்தவர்.
இந்த போராட்டத்தின் போது வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பொலிஸாரால் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர். அன்றைய நாட்களில் அது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.
“இப்படிப்பட்ட நாள்களைப் பார்க்கவா பதக்கங்களை வென்றோம்?” என்று செய்தியாளர்களிடம் வினேஷ் போகத் கண்ணீர் மல்க கதறி அழுதபடி பேசிய வார்த்தைகள் இணையத்தில் பெரும் வைரலாக பேசப்பட்டது.
விரக்தியின் உச்சத்தில் மத்திய அரசு தனக்கு வழங்கிய கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திரும்ப அளித்தார் வினேஷ் போகத். பிரதமர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தடுக்கப்பட்ட அவர் இரண்டு விருதுகளையும் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டு சென்றார்.
இப்படியான சூழலில் கடந்த ஆண்டு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து உடல் எடையை குறைத்து நடப்பு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.