வலிகளும் – சாதனைகளும்: பாடம் புகட்டும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்

0
501

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 11ஆவது நாளாக இடம்பெற்றுவரும் நிலையில் பல சுவாரஸ்யமான மற்றம் உலக சாதனைகளும் இடம்பெறுகின்றன.

இதனால் பார்ப்பவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் வீரர்களை பாராட்டியும் வருவதை சமூக வலைத்தளங்களின் வாயிலாக காணக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கை வீராங்கனைக்கு கிடைத்த அங்கீகாரம்

இலங்கையின் ஓட்டப்பந்தய வீராங்கனையான தருஷி கருணாரத்ன, சுவிட்சர்லாந்தின் லொசானில் அமைந்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) விளையாட்டு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காக பாரிஸ் ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட்ட தனது விளையாட்டு ஆடைகளை சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் கையளித்துள்ளார்.

இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் பங்குபற்றிய ஆசியாவின் இளம் வீராங்கனை தருஷி ஆவார். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக லொசானில் உள்ள ஐஓசி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த இலங்கை தடகள வீரர் ஒருவரின் ஆடை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஐஓசி அருங்காட்சியகத்தில் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூத்த மேலாளர் ஆன் ஜக்கார்டிடம் தனது கையொப்பத்துடன் கூடிய விளையாட்டு உடைகளை தருஷி சம்பிரதாயபூர்வமாக வழங்கினார். நன்கொடைக்கான அங்கீகாரமாக ஐஓசி தலைவர் தாமஸ் பாக் கையெழுத்திட்ட சான்றிதழையும் தருஷி பெற்றுள்ளார்.

கைவிரல் உடைந்ததால் கண்ணீர்விட்ட நிஷா தஹியா

இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா தனது 68 கிலோ ஃப்ரீஸ்டைல் (Freestyle) ​​காலிறுதிப் போட்டியில் வட கொரியாவின் சோல் கம் பாக்கிடம் முழங்கை உபாதை காரணமாகவும் கைவிரல் முறிவு காரணமாகவும் போட்டியில் இருந்து விலக நேரிட்டது. நிஷா இறுதிச் சுற்றில் 8-1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செபாஸ்டியன் கோவாலின் சாதனையை முறியடித்த ப்ராடிஜி

உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோவால் தடகளத்தின் ராக் ஸ்டார் என்று வர்ணிக்கப்படுவர். இவருடைய சாதனை இதுவரை முறியடிக்கபடாத நிலையில், 24 வயதான அமெரிக்காவில் பிறந்த ஆர்மண்ட் டுப்வண்டிஸ்(Armand Duplantis), 6.25 மீட்டர் தாண்டி இரண்டாவது தங்கத்தை வென்றதன் மூலம் புதிய உலக சாதனை படைத்தார்.

1952 மற்றும் 1956 இல் பாப் ரிச்சர்ட்ஸுக்குப் பிறகு, 68 ஆண்டுகளில், ஒரு இளம் வயது வீரர் மீண்டும் மீண்டும் பட்டங்களை வெல்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெண்கல பதக்கங்களை தவற விட்ட இந்திய ஜோடி

நேற்று இடம்பெற்ற கலப்பு ஸ்கீட் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களான மகேஸ்வரி சவுகான் மற்றும் அனந்த் ஜீத் சிங் நருகா ஒற்றை ஷாட்டில் வெண்கலத்தை தவறவிட்டமையானது பேசுபொருளாக மாறியுள்ளது.

பதக்க பட்டியல் விபரம்

ஐக்கிய அமெரிக்கா 21தங்கம், 30 வெள்ளி, 28 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 79 பதக்கங்களை பெற்ற முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

21 தங்கம், 18 வெள்ளி, 14 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 53 பதக்கங்களை வென்று சீனா இரண்டாம் இடத்திலும், 13 தங்கம், 16 வெள்ளி, 19 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 48 பதக்கங்களை பெற்று பிரான்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

தொடர்ந்து அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய வீரர்

பாரிஸ் ஒலிம்பிக்கில் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே 5வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 8ஆம் திகதி நள்ளிரவு 1 மணிக்கு நடைபெற உள்ளது.