வானில் தோன்றிய அரிய நிகழ்வு: இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

0
74

சந்திரனால் சனி கிரகம் மறைக்கப்பட்ட அரிய காட்சியை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு நேற்று (25)காலை கிடைத்திருந்தது.

இந்நிலையில், 13 ஆண்டுகளில் பின் மீண்டும் இவ்வாறானதொரு காட்சியை இலங்கையர்கள் காண முடிந்ததாக ஆர்தர் சி. கிளார்க் மையம் கூறியுள்ளது.

சந்திரனுக்குப் பின்னால் சனி கிரகம் நகர்ந்து வந்த நிலையில் பூமியிலிருந்து மறையும் அரிய நிகழ்வை இலங்கை மக்கள் நேற்று காலை நேரில் காண முடிந்தது.

நேற்று அதிகாலை 12.50 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் வரை நீடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ​​சந்திரனுக்குப் பின்னால் நகர்ந்த சனி கிரகம் அதிகாலை 2.10 மணியளவில் மீண்டும் மறுபுறம் தோன்றியதாக ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இந்த அற்புதமான நிகழ்வைக் காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்குக் கிடைத்தது. அதற்காக சிறப்பு கண்காணிப்பு மையமான ஆர்தர் சி. கிளார்க் மையத்தில் நிறுவப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி சனி கிரகம் சந்திரனால் மறைக்கப்படும் வாய்ப்பைக் காண நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

எதிர்வரும் 2037ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி இலங்கை மக்களுக்கு மீண்டும் இவ்வாறானதொரு அற்புதமான சந்தர்ப்பத்தை காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.