சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) இரவு வேளையில் ஒரு கர்ப்பிணித் தாய் வந்து கதவைத் தட்டிய போது திறக்காததால் உயிரிழந்த செய்தியை நான் முதலில் கேள்விப்பட்டிருந்தேன் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டிருந்த காணொளியிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எனது இரண்டு பிள்ளைகளுடன் மாலை 3.45 அளவில் வெளிநோயாளர் பிரிவிற்கு சென்ற போது அரை மணி நேரமாக அங்கு வைத்தியர் இல்லை. அப்போது வைத்தியர் வருவாரா என அங்கிருந்த தாதியிடம் வினவினேன்.
பின்னர் குறித்த தாதி அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த வைத்தியரிடம் சென்று இதனை தெரிவித்தார். இதனையடுத்து வெளியில் வந்த வைத்தியர் ”யார் கேட்டது டொக்டர் வருவாரா என்று இங்க டொக்டர் எல்லாம் தட்டுப்பாடு உங்களுக்கு தெரியாதா” என்று என்னிடம் அதட்டினார்.
இதேவேளை குறித்த வைத்தியர் என்னுடன் பெருமளவு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்கனவே இந்த வைத்தியசாலையில் நடந்த முறைகேடுகளைப் பற்றி பத்திரிகையில் வாசித்துள்ளேன் என அந்த வைத்தியரிடம் தெரிவித்தேன். இன்று பல ஆண்டுகள் கடந்து ஏதோ ஒரு வழியில் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த அசம்பாவிதங்கள் வெளியில் வந்திருக்கின்றது.
நேர்மையை நியாயத்தை எடுத்துச் சொல்ல விழைந்த ஒருவரை முழு உலகமும் சேர்ந்து தவறானவராக சித்தரித்து அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்து அவரை இயங்கவிடாமல் செய்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை அவர் தோல்வியடைந்தது சமூகத்தினுடைய தோல்வியாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த வழக்குகளில் வாதிடுவதற்கு வைத்தியருக்கு பெருமளவு நிதி தேவைப்படலாம்.
எனவே அவரை தனித்து விடாமல் அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆசிரியராகிய நான் என்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன். சமூகத்தின் நீதிக்காக போராடிய ஒருவரை கைவிட முடியாது.“ என தெரிவித்துள்ளார்.