அத்துருகிரிய கொலை சம்பவம்: மேலும் இருவர் மாத்திரமே கைது செய்யப்பட வேண்டும் – அமைச்சர்

0
91

சுரேந்திர வசந்த பெரேரா அல்லது க்ளப் வசந்த கொலை சம்பவத்தின் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று வெளிப்படுத்தியிருந்தார். அங்கு ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

க்ளப் வசந்த மற்றும் மதுஷ் ஆகிய இருவருக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

மதுஷின் பணம் க்ளப் வசந்தவிடம் இருந்ததா என்பது தொடர்பில் தற்போது எங்களுக்கு சரியான ஒரு தகவல் இல்லை. அத்தகைய விசாரணை எங்களிடம் இல்லை.

எங்களுக்கு விசாரணைகளில் அவ்வாறானதொரு தகவல் கிடைத்தால் யாருடைய பணமாவது இருப்பது தெரியவந்தால் நிச்சயம் அவர்களை கைது செய்வோம். இவ்வாறான காரணிகள் அரசியல் கருத்துக்களால் உருவாக்கப்பட்டவை ஆகும்.

இது அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நான் உறுதியளிக்கிறேன். எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக பிடித்து விடுவோம்.

ஆனால் எங்களுக்கு சரியான தகவல்கள் இருக்க வேண்டும். யூடியூப்பில் தெரிவித்தவை அல்ல. அவ்வாறு மதுஷின் பணம் யாரிடமாவது உள்ளதாக எங்களுக்கு இன்று வரையில் எந்த தகவலும் இல்லை.

க்ளப் வசந்த தொடர்பில் ஒவ்வொரு விடயங்கள் தெரிவிக்கப்பட்டாலும் எங்களுக்கு நூறு வீதம் தெரியாது. ஆனால் அவர் தொடர்ந்தும் க்ளப்களை தொடரந்து செய்து வந்தார். அப்போது பணம் இருந்தது.

எனினும், தற்போதைய தகவல்களின்படி, அவர் உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் நாடளாவிய ரீதியில் கடனாளியாகி கையில் பணம் இன்றி இருந்தார் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

புலனாய்வு அறிக்கையின்படி, கஞ்சிபானை இம்ரான் தற்போது எங்கே? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

கஞ்சிபானை இம்ரான் தற்போது எங்கே இருக்கிறார் என எங்களுக்கு தற்போது தெரிந்தாலும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் அதனை கூற மாட்டோம். இந்த சம்பவத்தின் பின்னர் பாதாள உலகத்தைத் தொடக்கூடிய பலர் தோன்றினர். காளான்கள் போல தோன்றினர்.

என்னால் அதை செய்ய முடியும், இதை செய்ய முடியும், அது தெரியும், இது தெரியும் என பைத்தியக்காரர்கள் கூறும் கதைகளுக்கு பின்னால் சென்றால் எங்களுக்கும் பைத்தியம் பிடிப்பது என்பது உறுதி. எங்களால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாமல் போய் விடும்.

இந்த யூடியூப் சனல்கள் கூறும் விடயங்களை நாங்கள் பொழுதுபோக்குக்காக பார்ப்போமே தவிர அதனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவதில்லை.

சில யூடியூபர்கள் அதைச் சரியாகச் செய்கிறார்கள். ஆனால் பணம் சம்பாதிக்க சிலர் பொய் சொல்லி பணம் பெறுகிறார்கள். இன்று நான் உறுதியளிக்கிறேன். உங்களால் முடிந்தால் கஞ்சிபானையைக் கொண்டு வாருங்கள். எங்களிடமிருந்து எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது.

எப்படி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்கள்? அரசியல் ஆதரவு இருந்ததா?

எனக்கு அரசியல்வாதிகளை பற்றித் தெரியாது. கஞ்சிபானை இம்ரான், கணேமுல்லை சஞ்சீவ ஆகியோரின் சட்டத்தரணிகளே அவர்கள் தப்பிச் செல்ல காரணம்.

இப்போது அவர்களை கைது செய்துள்ளோம். இந்த போதைப்பொருள் பணத்தை நம்பியே சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். இந்த நாட்டில் உள்ள சட்டத்தரணிகளின் எண்ணிக்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இதைச் செய்கிறார்கள்.

போதைப்பொருள் வழக்கை ஏற்காத வேறு வழக்கறிஞர்களும் உள்ளனர். அத்துருகிரிய சம்பவத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்களில் பலரை கைது செய்துவிட்டோம். இன்னும் இரண்டு பேர் மாத்திரமே கைது செய்யப்பட வேண்டியவர்கள் என்று நினைக்கிறேன்.” என டிரான் அலஸ் தெரிவித்தார்.