ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் கப்டன் இலங்கையை சேர்ந்த தமிழர் உட்பட 6 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் தலைமை மாலுமியும் இலங்கைத் தமிழருமான கே வைத்தியகுமாரின் மகள் துளசி வைத்தியகுமார் காணாமல் போனவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் 16 பணியாளர்களில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 8 இந்தியர்களும் ஒரு இலங்கையர்களும் உள்ளதாக இந்திய கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன. அவர்களிற்கு தற்போது மருத்துவசிகிச்சை வழங்கி வருவதாகவும் உயிர்காக்கும் படகில் புறப்பட்ட ஆறு பேரையே காணவில்லை எனவும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன கப்பல் பணியாளர்கள் குறித்து தலைமை மாலுமியின் மகள் துளசி வைத்தியகுமார் கவலை வெளியிட்டுள்ளார். கப்பலின் கப்டன் எனது அப்பா என தெரிவித்துள்ள அவர் கப்பலில் 16 பேர் பணியாற்றினார்கள் அவர்களில் மூவர் இலங்கையர்கள் 13 பேர் இந்தியர்கள் என துளசி தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக ஒருவர் உயிரிழந்துவிட்டார். காப்பாற்றப்பட்ட ஒன்பது பேரில் எட்டு இந்தியர்களும் ஒரு இலங்கையரும் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அவர்களிற்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகவும் ஏனையவர்கள் உயிர்காக்கும் படகில் தப்பிச் சென்றனர் என தெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
ஓமான் அரசாங்கம் அந்தநாட்டின் கடல்சார் அமைப்பு இந்திய கடற்படை ஆகியன ஒன்றிணைந்து மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் குழப்பமும் கவலையும் அடைந்துள்ளோம், அந்த ஆறு பேரையும் அவர்களின் குடும்பத்தவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கப்டன் வைத்தியகுமார், தலைமை பொறியியலாளர் தயாநிதி அப்பாசாமி, குகனேசன் மகேசதாசன் ஆகியோரே கப்பலில் பயணித்த இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .