ரணில் ஆட்சியிலும் தொடரும் தடுப்புக்காவல்கள்: வெளிப்படுத்திய மனித உரிமைகள் கண்காணிப்பகம்

0
52

இலங்கை அதிகாரிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் (Prevention of Terrorism Act -PTA) பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களை நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி இலக்கு வைப்பதாக அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch – HRW) குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்ட பின்னரும் பாதிக்கப்பட்டவர்கள் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை எதிர்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டமானது நீட்டிக்கப்பட் தடுப்புக்காவல், நீதித்துறை மேற்பார்வை மற்றும் சித்திரவதைக்கு எதிரான போதிய பாதுகாப்புகளை அனுமதிக்கும் விதிகளைக் கொண்டுள்ளது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உரை ஆற்றிய அப்போதைய வெளிவிவகார அமைச்சர் அதன் பயன்பாட்டிற்கு இடைக்காலத் தடை விதித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம்

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல்கள் தொடர்ந்தன. தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக 2023 இல் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊழல்மோசடிகள் பற்றிய ஆய்வுகளை சிவில் சமூக அமைப்புகள் அதிகாரபூர்வமாக மேற்கொள்வதற்கு இடமளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியிருந்தது

வெளிநாட்டு பங்காளர்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைச் சபை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் கடந்த வருடம் மார்ச் மாதம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு வெளியிடப்பட்டது.

1979 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய அரசாங்கத்தினால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறை அவஸ்தைகள்

1979 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்டம் 2009 ஆம் ஆண்டு, வீழ்த்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிலான போரின் போது தமிழ் மக்களை இலக்குவைக்க முதன்மையாக பயன்படுத்தப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் சிலர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்கு நாடுகளின் சர்வதேச அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டனர்.

1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கிடையில் முதலில் தடுத்து வைக்கப்பட்ட சுமார் எட்டு பேர் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக 09 பேரை சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரத்தில் பொலிசார் கடந்த வருடம் கைது செய்தனர்.

விடுதலையின் பின்னரான கொடுமைகள்

ஒரு மாதம் கழித்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர், மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம், தான் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், வழக்கின் காரணமாக அவரது குடும்பம் வருமானத்தை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் சிறுவர் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் போராளி என்பதால், வயது வந்த போராளிகளுடன் அரசாங்க புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு முகாம்கள் தன்னை “புனர்வாழ்வளிக்கப்படாதவர்” என கருதுவதால் தான் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக அவர் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “நான் பயப்படுகிறேன். யார் என்னைப் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.” என அச்சம் வெளியிட்டுள்ளார்.

கைதியுடனான நேர்காணல்

இதேவேளை, புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதி உதவியைப் பெற்ற பின்னர் 2019 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலரில் ஒருவரை மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேர்காணல் செய்தது. இதன்போது அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்,

இலங்கை அதிகாரிகள் சில சமயங்களில் “பயங்கரவாத நிதியுதவி” எனக் கருதுகின்றனர். எதற்காக கைது செய்யப்பட்டோம் என்று தெரியவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டம் எந்த காரணமும் இல்லாமல் எங்களை தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு அனுமதிக்கிறது. சிறையில் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டேன்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் பொலிஸ் துன்புறுத்தலை எதிர்கொள்கிறோம். எனக்கு வேலை கொடுக்க மக்கள் பயப்படுகிறார்கள்” என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இதேவேளை, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, காத்தான்குடியில் 25 முஸ்லிம்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோருக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் முன்வைக்கப்படவில்லையென நிலைமை குறித்து நன்கு அறிந்த வழக்கறிஞர் ஒருவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலானவர்கள் ஒன்று முதல் மூன்று வருடங்கள் காவலில் வைக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் முழுவதுமாக அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 24 பேர் விசாரணையை எதிர்கொள்வதாகவும் இது பல வருடங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுவைச் சேர்ந்த கைதிகள் சிலர் காவலில் சித்திரவதை அனுபவித்ததாகவும், அவர்களை விடுவிக்குமாறு அவர்களது குடும்பத்தினரிடம் பொலிஸார் பணம் கேட்டு மிரட்டியதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களால் வங்கிச் சேவைகளை அணுகல், கடவுச்சீட்டுகளைப் பெறல் அல்லது தங்கள் வணிகங்களைச் செயற்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. “அவர்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல முடியாது” எனவும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.