பிரித்தானிய வரலாற்றில் முதன் முறையாக பெண் நிதி அமைச்சர்!

0
76

பிரித்தானியாவில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் புதிய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதுடைய ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves), பவியேற்றதன் பின்னர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் “நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது எனது வாழ்வின் பெருமையாகும். இது என்ன பொறுப்பைக் கொண்டு வருகிறது என்பதை நான் அறிவேன்.

மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு நமது பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.

வரலாற்றில் முதல் பெண் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நான் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதைப் படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் பெண்களுக்கும், உங்கள் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என்பதை காட்டட்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) நாட்டின் 58 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அத்துடன் துணைப் பிரதமராக ஏஞ்சலா ரெய்னர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மேலும் சமத்துவம், வீட்டு வசதி மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதுடைய ரேச்சல் ரீவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.