சர்ச்சைகளுக்கு மத்தியில் பியூமியின் முகப்புத்தக பதிவு: தொடரும் தீவிர விசாரணைகள்

0
66

‘குற்றப் புலனாய்வு பிரிவால் எனக்கு நிம்மதி இல்லை. நான் எனது மன நிம்மதியை இழந்துவிட்டேன்’ என இலங்கையின் பிரபல மொடல் அழகியும், நடிகையுமான பியூமி ஹன்சமாலி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

வேண்டுமென்றே போதைப்பொருள் சம்பவத்தில் தன்னை சிக்கவைக்கும் விளையாட்டு இது என்றும் இந்தக் கீழ்த்தரமான செயற்பாட்டுக்காகத் தான் சாபமிடுவதாகவும் அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

தனது காரை விற்று ஒரு வருடம் கடந்து விட்டதாகவும் இது தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரின் மனைவி தனது பழைய தோழி ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நட்பு காரணமாக பணத்தை 50 இலட்சமாக இரு தவணைகளில் வழங்கியதாக பியூமி ஹன்சமாலி கூறியுள்ளார்.

வாகனத்துக்காக பாதிப் பணத்தை வழங்கியதாகவும் அதன் காரணமாக வாகனம் இன்னும் தன் பெயரில் இருப்பதாகவும் பியுமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.

விமானம் மூலம் பல போதைப்பொருள் பொதிகளை இலங்கைக்கு கொண்டு வந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (05) நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

கோடீஸ்வர தொழிலதிபர் பயன்படுத்திய பி.எம். டபிள்யு அதி சொகுசு காரும் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கார் பிரபல மொடல் நடிகையான பியூமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பியூமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் மற்றும் சந்தேக நபர் பயன்படுத்திய தொலைபேசி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.