சம்பந்தனின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பார்வை; சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் பதிவு

0
30

சம்பந்தனின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் முகமாக வைத்தியல் முரளி வல்லிபுரநாதன் எழுதிய கட்டுரை சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

அவர் இந்த பதில் சம்பந்தனின் வாழ்க்கை வரலாற்றை பற்றி குறிப்பிட்டுள்ளதாவது,

சம்பூர் போராட்டம்

2006ம் ஆண்டு இலங்கை இந்திய அரசாங்கங்கள் ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் ஊடுருவும் திட்டங்களின் ஒரு பகுதியாக அனல் மின் நிலையம் ஒன்றை சம்பூரில் அமைப்பதற்காக 12000 தமிழரை அவர்களுடைய சொந்த நிலங்களில் இருந்து அகதிகளாக வெளியேற்றி இருந்தனர்.

2014 ம் ஆண்டு நான் யாழ் மருத்துவ சங்கத் தலைவராக இருந்த போது இராமர் பாலத்துக்கு அணிலும் உதவியது போல் சம்பூர் அகதிகளுக்கு சில உதவிகளை செய்வதற்கு அங்கு சென்றபோது தமிழர்களை காப்பதற்கு பல வடிவங்களிலும் சம்பந்தன் ஐயா எடுத்துவரும் பல நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டேன்.

அதனால் அவர் மீது எனக்கு பெரு மதிப்பு ஏற்பட்டு இருந்ததுடன் ஈழ தமிழர்களின் சாணக்கியனாக அவரை கருதினேன். தொடர்ந்து அவரும் ஏனைய பலரும் இணைந்து பிரயோகித்த அழுத்தங்களின் காரணமாக 2016ம் ஆண்டு சம்பூர் தமிழர்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்ப கூடிய நிலை ஏற்பட்டது. 

சம்பந்தன் ஐயா தமிழர்களின் சாணக்கியன்

“செய் அல்லது செத்து மடி” என்பது பெரும்பான்மையானோர் எழுச்சி பெறும் ஒரு சூழ்நிலையில் அல்லது போர்க்களத்தில் வீரர்களுக்கு உரிய ஒரு தாரக மந்திரமாக இருக்கலாம் .

ஆனால் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை பெறும் சதுரங்க விளையாட்டில் காலம் வரும் வரை பின்வாங்குவதும் உரிய நேரத்தில் முன்னேறி உரிமைகளை பெறுவதும் முக்கிய உபாயமாக இருக்கிறது. இதையே திருவள்ளுவரும் “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.”

அதாவது தன்னை விட வலிமையான கூகையைப் (ஆந்தையை ) பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கு தகுந்த காலம் வேண்டும் என்று கூறி இருந்தார்.

எல்லைப்புற நகரமான திருமலையில் இருந்து வந்த காரணத்தினால் சம்பந்தன் ஐயாவுக்கு இயல்பாகவே ஒவ்வாத காலத்தில் நேரடி மோதலை தவிர்க்கும் சாணக்கியம் அதிகமாக இருந்தது என்று கருதுகிறேன்.

அதை விளங்கி கொள்ளாதவர்களும் அவர் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களும் அவரை துரோகி என்றும் அவரது இறப்பை தீபாவளியாக கொண்டாடவேண்டும் என்றும் தெரிவித்து வருகிறார்கள் .

ஒருபுறம் இந்திய இலங்கை ஐந்தாம் படைகளுக்காக மாலைதீவில் ஈழப் போராட்டம் நடத்திய கூலிப் படையினரும் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை ‘மண்டையில் போட்டுப்’ படுகொலை செய்து சொத்துக்களை அபகரித்தவர்களை ‘தர்மதேவதை’, ‘தியாகி’ என்று போற்றி அவர்களுக்குச் சிலைகள் வைக்கும் காலத்தில் எந்த வித குற்றச் செயல்களுடனும் தொடர்புபடாத சம்பந்தன் ஐயாவை அரசியல் கருத்து வேறுபாட்டுக்காக நரகாசுரனாகச் சித்தரித்து கொண்டாடுபவர்களின் வக்கிர புத்தியை என்னவென்று கூறுவது? மறுபுறம் சம்பந்தன் ஐயா பெருமதிப்புக்கு உரியவராக இருப்பதனால் அவரின் உண்மையான அரசியல் எதிரிகள் இப்போது அவரை நல்லவர் வல்லவர் என்று கூறிப் பல கண்துடைப்பு அறிக்கைகளை வெளியிட்டுத் தம்மையும் நல்லவர்களாகக் காட்டித் தமிழர்களின் வாக்குகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

சம்பந்தன் ஐயா ஒரு ஒப்பற்ற இராஜதந்திரி

83இல் இனக்கலவரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக தனது பாராளுமன்ற பதவியைத் தியாகம் செய்த சம்பந்தன் ஐயா இந்தியா மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளின் புலனாவுக் குழுக்கள் அவற்றின் கட்டளைப்படி இயங்கும் ஒட்டுக் குழுக்கள், ‘இனவிடுதலைப் போராட்டம்’ என்று கூறிக்கொண்டு போட்டித் தமிழ்த் தலைவர்களைக் கொல்லும் போராளிக் குழுக்கள், ஈழத்து ஆதரவாளர்கள் என்று கருதும் அனைவரையும் போட்டுத்தள்ளும் வெள்ளைவாகன யுகம் ஆகியவற்றைக் கடந்து ‘ஈழத்தில் இருந்து தப்பியோடாது 91 வயது வரை சிங்கத்தின் குகைக்குள்ளேயே வாழ்ந்து இயறகை மரணம் எய்தினார்’ என்பதே அவர் ஒரு ‘ஒப்பற்ற இராஜதந்திரி’ என்று அழைக்கப் போதுமானது.

1. புலிகள் 2009இல் அழிந்த போது அவர் மௌனமாக இருந்தார் என்பதே முதன்மையான குற்றச்சாட்டாக இருக்கிறது. அந்த நேரத்தில் இலங்கையில் யார் புலிகளுக்கு சார்பாக கதைக்கக் கூடியதாக இருந்தது? தமிழ்த் தலைவர்கள் என்று கூறுவோர் பலர் நாட்டை விட்டுத் தப்பியோடி ஒளித்து இருந்தார்கள். ஏனையோர் அனைவரும் உயிரோடு மௌனிக்கப்பட்டு இருந்தார்கள்.

அதிகபட்சம் தமிழர்கள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த முகாம்களின் சுகாதார நிலை பற்றி சமுதாய மருத்துவராக நான் கருத்து வெளியிட்டதற்காகச் சம்பளம் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தேன்.

இந்த நிலையில் ஏனையோர் வாய் திறப்பது எப்படி? ரவிராஜ் குமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் தலைவர்களுக்கும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவான ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்பதை இவர்கள் அறியமாட்டார்களா?

அப்படி ஒரு சம்பவம் சம்பந்தன் ஐயாவுக்கு நடந்திருந்தால் இவர்கள் என்ன செய்திருப்பார்கள்? தாம் ஒளிந்திருக்கும் நாடுகளில் இருந்து வழமை போல புலனக் குழுக்களில் இரகசியமாகக் கண்ணீர் அஞ்சலி செய்த்திருப்பார்கள், எல்லோரும் பார்க்கும் முகநூலில் கூட முதுகெலும்புடன் சொந்தப் பெயரில் பதிவிடத் திராணி இல்லாத இந்த ஜென்மங்கள்.

சம்பந்தன் ஐயா மீது குற்றம் சாட்டுவோர் பலர் 2009 இல் என்ன செய்தார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் பல களவாணிகளின் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வரும்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் உணர்வுடையோரின் உணர்ச்சிகளை தூண்டி அவர்களின் தாலிக்கொடிகள் நகைகள் மற்றும் பெரும் நிதியை திரட்டி தமது சட்டைப்பைகளில் பதுக்கி கொண்டு ‘வணங்காமண்’ என்ற கப்பலில் முல்லைத்தீவுக்கு உதவிகளை அனுப்புவதாக நாடகம் ஆடினார்கள்.

இவர்களா ஈழத்தில் இறுதி வரை வாழ்ந்து ஈழத்தமிழர்களின் நலனை பற்றி 24 மணி நேரமும் சிந்தனை செய்த சம்பந்தன் ஐயாவில் பிழை பிடிப்பது ?

2. சிங்கள தேசியக் கொடியை ஆதரித்தார் சிங்கள தலைவர்களை ஆதரித்தார் ஒற்றை ஆட்சியை அங்கீகரித்தார் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு.

இந்தியா உட்பட அனைத்து வல்லரசுகளும் இணைந்து புலிகளை அழித்து விட்டு ஒரு நாடு கூட தனி ஈழத்துக்கு ஆதரவளிக்க தயாராக இருக்காத நிலையில் வேறு என்ன செய்ய முடியும் ? இந்திய வல்லரசு 13வது திருத்தத்துக்கு அப்பால் ஒன்றும் கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரிக்கும் போது சிங்கள தலைவர்களிடம் இருந்து எதை எதிர்பார்க்க முடியும்? களநிலையைச் சரியாகப் புரிந்து கொண்ட சம்பந்தன் ஐயா ஒற்றையாட்சிக்குள் அதிக சுயாட்சியை தரக்கூடிய சமஸ்டி தீர்வை கோரி நின்றார்.

13 வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை தந்தால் போதும் என்று தலையாட்டி வரும் இந்திய முகவர்களாக இயங்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களின் மத்தியில், 4 தசாப்த போரின் விளைவாக ஏற்பட்ட தமிழரின் குடித்தொகை பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சி தாயகத்தில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கமுடியாத கள நிலைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு யதார்த்தமான தமிழர்களுக்கு அதிக பட்ச உரிமைகளை தரக்கூடிய ஒரு தீர்வை கோரி நின்ற இணையற்ற ராஜதந்திரியாக சம்பந்தன் ஐயா திகழ்ந்தார்.

அதன் ஒரு அம்சமாகச் சிங்களத் தலைவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களிடம் தமிழர்களுக்கு அதிக பட்ச உரிமையைப் பெறுவதற்கு ஒற்றை ஆட்சியைப் பிரதிபலிக்கும் தேசியக்கொடியை பிடித்ததும் சிங்கள ஆட்சியாளர்களை இலங்கையின் தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்வதும் ஒரு குற்றமா ?  

இலங்கை தமிழரசு கட்சி சா. ஜே. வே. செல்வநாயகம்,கு. வன்னியசிங்கம், இ. மு. வி. நாகநாதன் ஆகிய இரு வழக்கறிஞர்களும் ஒரு மருத்துவரும் இணைந்து கட்சியை ஸ்தாபித்து இருந்தார்கள். அவர்கள் அனைவரும் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்களாகவும் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் உச்ச புலமையை கொண்டிருந்ததுடன் சமயோசிதமாக கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் சுயநல சூழ்ச்சிகளில் ஈடுபடாதவர்களாகவும் இருந்தார்கள்.

அதே திறமைகளை கொண்டிருந்த சம்பந்தன் ஐயாவும் அவருக்குப்பின் வரக்கூடிய தலைவர்கள் அதே திறமையை கொண்டிருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். இத்தகைய திறமைகள் எதுவும் அற்றவர்களை தலைமைத்துவத்துக்கு அனுமதித்ததன் மூலமாக தமிழரசுக் கட்சியின் அழிவுக்கு வழிவகுத்தார். ஆனால் அந்த தவறுக்கு அவர் மட்டும் பொறுப்பாளி அல்ல.

ஆளுமை மிக்க தமிழரசு கட்சியின் தலைவர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோர் இந்திய ஏவல் நாயாக செயல்பட்டு வரும் டெலோவினால் படுகொலை செய்யப்பட்டது முதல் ஆய்தக்குழுக்களினால் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் மற்றும் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செய்த சூழ்ச்சிகளினால் சம்பந்தன் ஐயா இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டது என்று கருதலாம்.

எது எப்படி இருந்தாலும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை பெற விரும்புவர்கள் ஏனைய மாவட்டங்களில் இருந்து வரும் நீரினால் நிரம்பும் இரணைமடுக் குள நீரை யாழ் மாவட்டத்துக்கும், கிளிநொச்சி மண்ணின் உண்மையான மைந்தர்களுக்கும் தரமாட்டோம் என்று வந்தேறுகுடிகளின் பிரதிநிதியாக கொக்கரிக்கும் போதே தமிழரசுக் கட்சியின் அஸ்தமனம் ஆரம்பித்துவிட்டது.

போர்க்குற்றங்களை நிரூபிப்பது அதிகூடிய பட்சமாக சில சிங்கள தலைவர்களை சிறைக்கு அனுப்புமே தவிர தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தராது என்ற கசப்பான உண்மையை புரிந்து கொள்வோம். துரதிஷ்டவசமாக சிங்கள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே எமது உரிமைகளை பெற வேண்டிய பலவீனமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

இந்நிலையில் மீண்டும் ‘தமிழ் பொது வேட்பாளர் நாங்கள் இலங்கையின் ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று கூறினால் எவ்வாறு எதிர்கால சிங்கள ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது உரிமைகளை பெற முடியும்? எனவே முதுபெரும் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் காட்டிய வழியில் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்போம்.

மோடியின் அரசாங்கம் இலங்கையின் வளங்களை சூறையாடுவதைத் தடுப்பதற்கு அதை நிறுத்தக் கூடிய ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அதே வேளை பாராளுமன்றத்தில் தமிழரின் கரங்களைப் பலப்படுத்தி அதிகளவு உரிமைகளை பெறுவதற்கு ஜனநாயக வழியில் இயங்கும் தமிழ்த் தலைவர்களை கொண்ட ஒன்றுபட்ட புதிய கட்சி அல்லது கூட்டணி உருவாக்கப்படுவது மிகவும் அவசியம்.

அதுவே இறுதி வரை ஈழ தமிழர்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் போராடிய சம்பந்தன் ஐயாவின் புண்ணிய ஆத்மாவுக்கு நாம் செய்யும் பிரதி உபகாரம் ஆகும்.