போர் குற்றவாளியான மகிந்த ராஜபக்ச: விளக்கமளிக்கும் நாமல்

0
26

இலங்கையில் ஒற்றையாட்சியை பாதுகாத்து, சமாதானத்தை ஏற்படுத்த முற்பட்டதாலேயே சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) போர்க் குற்றவாளியாக்கப்பட்டதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அண்மையில் குளியாபிட்டியவில் இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழ் மக்களின் வாக்குகளுக்காக போலி வாக்குறுதிகளை பலர் வழங்குவதாகவும், அவ்வாறு வழங்குவதாயின் போரின் போது படையினர் எதற்கு உயிர் தியாகம் செய்தார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமாதானம், போர் நிறுத்தம், பேச்சு வார்த்தை, ஒப்பந்தம் தொடர்பில் பல தலைவர்கள் அரசியல் மேடைகளில் உறுதியளித்து வருவதாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இவற்றை மகிந்த ராஜபக்ச தனது அரசியல் மேடையிலிருந்து நீக்கியிருந்ததாகவும் சிறிலங்கா இராணுவத்தின் அர்ப்பணிப்புடன் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச இலங்கையை பொறுப்பேற்கும் போது காணப்பட்ட போர் நிலையை சமாதான ஒப்பந்தத்தின் ஊடாக போரை முடிவுக்கு கொண்டு வர முற்படுவோம் என சிலர் கூறியிருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.  

மேலும் சிலர் ஆயுதங்களை வழங்கியாவது போரை நிறுத்துவோம் எனும் நிலைப்பாட்டில் இருந்ததாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில் இலங்கையில் சுதந்திரம் மற்றும் சமாதானத்தை மீண்டும் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தனது தந்தையான மகிந்த ராஜபக்ச மேற்கொண்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.