இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த பேச்சு: கத்தார் எகிப்து மத்தியஸ்தம்

0
26

போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பாக கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்களுடன் ஹமாஸ் தலைவர் பேச்சு வார்த்தை நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸின் கருத்துக்களை இஸ்ரேல் மதிப்பிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்தியஸ்தர்களுக்கு தனது பதிலை தெரிவிக்கும் என்று இஸ்ரேலிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

கான் யூனிஸில் உள்ள நாசர் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலஸ்தீனியர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர்.

சில நாட்களுக்குப் பின்னர் தெற்கு காசா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட நகரத்தின் கிழக்குப் பகுதிகளை விட்டு வெளியேற 250,000 மக்களுக்கு இஸ்ரேல் உத்தரவிட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசத்தில் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்ட்ரியா டி டொமினிகோ, காசாவில் எங்கும் எவரும் பாதுகாப்பாக இல்லை என்று கூறினார்.

மக்கள் பாதுகாப்பான புகலிடத்தை கண்டுபிடிக்க முடியாத இடமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,000 ஐ அண்மித்ததுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 87,000 ஐ கடந்தது.