ரணில் – மகிந்த ஆதரவு அணிக்குள் பிளவு: தம்மிக்க பெரேரா முன்னிலையில் – பசில் டில்லிக்கு அறிவித்தது என்ன?

0
23

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றை இவ்வார இறுதியில் நடத்தவுள்ளதாக அரசாங்காத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைத்துள்ளது.

தற்போது பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து ரணிலின் பக்கம் நிற்கும் குழுவுக்கு மேலதிகமாக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியின் கொள்கைகளுடன் இணக்கம் தெரிவிக்கவில்லை என அறிவித்துள்ள நிலையில், குறித்த குழுவுடன் பொது இணக்கப்பாட்டை உருவாக்குவது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ரணிலுடன் சிரேஷ்ட அரசியல்வாதிகள்

இதற்காக தற்போது பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தி ரணிலுடன் செயற்படும் சிரேஷ்ட அரசியல்வாதிகள் சிலர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாமல் ராஜபக்ச இளம் அமைச்சர்கள் குழுவுடன் இணைந்து செயற்பட தயாராகி வருவதாகவும் அவர் தனது எதிர்கால அரசியல் பாதையை நோக்கி செயற்பட்டு வருவதாகவும் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு குழுக்களாக தற்போது ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அதனுள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தலைமையிலான குழு முன்னிலை வகிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள்

விசேடமாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசியக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலர் ரணிலை சந்தித்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.

மேலும், ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி தேர்தல் மேடையில் ஏறுபவராக இருந்தால் அவருக்கு முழு ஆதரவு வழங்க தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் பெரும்பான்மை இணக்கப்பாடு காணப்படுவதாக அறியக்கிடைத்துள்ளது.

தம்மிக பெரேரா முன்னிலையில்

இவ்வாறான பின்னணியில், கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக பெரேரா தங்களது ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலின் முதன்மையில் உள்ளதாக பசில் ராஜபக்ச மூலம் இந்தியாவுக்கு அறியக்கிடைத்துள்ளதாக சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகைத் தந்த சந்தர்ப்பத்தில் பசில் ராஜபக்சவுடன் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போதே, பசில் ராஜபக்ச இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

சஜித் பின்னால் வரிசை

இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவருடன் இணைய அரசாங்கத் தரப்பிலிருந்து பலரும் வரிசைக் கட்டி நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் களம் சூடு கண்டுள்ள நிலையில் இவ்வாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை உத்தியோகபூர்வமாக அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்னும் 17 நாட்கள் மாத்திரமே காணப்படுகிறன. அதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.