ஆபத்தான நிலையில் இருந்த இலங்கைத் தாய்த்திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (26-06-2024) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது,
இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்றையதினம் பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டது. மேலும், அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இது ஒரு நற்செய்தியாகும். சிலர் ஜனாதிபதி பதவிக்காக கடுமையாக பாடுபடும் நிலையில் நான் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறேன்.
அவர்கள் தமக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றிக் கனவு காணும் போது, நாட்டின் அபிவிருத்தியைப் பற்றிக் கனவு காண்கிறேன். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இலங்கைத் தாயை ஆபத்தான கயிற்றுப் பாலத்தின் ஊடாக கொண்டு வர முடிந்ததுள்ளது.
ஹனுவட்டயே நாடகத்தில் வருவதைப் போன்று கடினமான நிலைமையில் குழந்தையை பாதுகாப்பதற்கு அஞ்சி எந்த ஆதரவையும் வழங்காத நபர்கள், குழந்தை கயிறு பாலத்தை கடக்கும் முன்பே குழந்தையின் உரிமையைக் கேட்டு போராடுகின்றனர்.
கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நாட்டினால் 2 ஆண்டுகளில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது பாரிய வெற்றியாகும்.
சமீபத்திய வரலாற்றில் பொருளாதார புதைகுழியில் விழுந்த உலகின் எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறான நிலையை அடைந்ததில்லை.
நாடு எதிர்நோக்கும் சவால்களை உண்மையாகப் புரிந்துகொண்டு அவற்றிற்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி முடிவுகளைக் காட்டிய என்னுடன் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்களா?
இல்லையேல் இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாத மற்றும் அதிகாரத்திற்காக இருட்டில் தத்தளிக்கும் குழுக்களுடன் இணைவதா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.