13 ஆண்டுகளுக்கு பிறகு யானைகள் கணக்கெடுப்பு: வனவிலங்கு பாதுகாப்பு துறை தீர்மானம்

0
46

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கணக்கீடு நடைபெறவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் அது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி உட்பட 02 நாட்களில் யானைகளின் மொத்த தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் குடிமைத் தற்காப்புப் படை உறுப்பினர்களும் இந்தக் கணக்கெடுப்பிற்கு உதவுவார்கள்.

இறுதியாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்டையில், இந்த நாட்டின் காடுகளில் 5000 முதல் 6000 யானைகள் இருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொதுவாக இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன் பின்னர், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் யானைகள் கணக்கெடுப்பை 2021இல் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும், கோவிட் தொற்றுநோய் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.