அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் போதைப் பொருட்கள் வைத்திருந்தமை மற்றும் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதற் சந்தர்ப்பமாகும். 2018ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரிலிருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கி மற்றும் சட்டவிரோதமான போதைப் பொருட்களை ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி கண்டெடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பொலிஸில் வாக்குமூலம் அளித்ததையடுத்து, ஹாண்டர் பைடனின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஹண்டர் பைடன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே, தனியார் செய்தி நிறுவனமொன்றுக்கு பேட்டியளித்த ஜனாதிபதி ஜோ பைடன், “இந்த வழக்கில் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரை மன்னிக்கவே மாட்டேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்சமயம் அவரை குற்றாவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, இதுதொடர்பில் கருத்து தெரிவித்த பைடன், “நான் ஜனாதிபதி, மற்றும் ஒரு தந்தை. தமது பிள்ளைகள் ஒரு விடயத்துக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வருவதைப் பார்த்து பெற்றோர் பெருமையடையும் உணர்வு அனைவருக்கும் புரியும். இதனால் இந்த வழக்கின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்வதோடு நீதிமன்றத்தின் நடைமுறைகளுக்கும் மரியாதையளிப்பேன்” என உறுதியளித்துள்ளார்.