தெற்கு காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
‘தெற்கு காசாவில் ரபா நகரின் வட மேற்கில் உள்ள அகதிகள் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் படுகொலை நடத்தப்பட்டிருப்பதோடு இதில் 40 பேர் கொல்லப்பட்டு, 65 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரான முஹமது அல் முகையில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த முகாம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும்.
உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணி அளவில் இந்த முகம் மீது குறைந்தது எட்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
டால் அல் சுல்தான் பகுதியில் உள்ள கூடாரங்களில் கொல்லப்பட்ட பலரும் உயிருடன் எரிந்திருப்பதாக பலஸ்தீன செம்பிறை சங்கத்தை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
‘நாம் இரவுத் தொழுகையை முடித்திருந்தோம்’ என்று உயிர் தப்பிய பலஸ்தீன பெண் ஒருவர் தாக்குதல் குறித்து நினைவுகூர்ந்தார். ‘எமது குழந்தைகள் உறங்கி இருந்தார்கள். திடீரென்று பெரும் சத்தம் கேட்டதோடு எம்மை சுற்றிய பகுதிகள் அனைத்தும் தீப்பற்றின. குழந்தைகள் கூச்சலிட்டார்கள்… அந்தச் சத்தம் பயங்கரமாக இருந்தது’ என்று அந்தப் பெண் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
அங்கு செயற்படும் செஞ்சிலுவை சங்கத்தின் மருத்துவமனை ஒன்றுக்கு தீக்காயங்களுடன் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர்களை காப்பதற்கு எம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம் என்று செஞ்சிலுவை சங்கம் கூறியது.
ரபா நகரின் மேற்காக உள்ள பிர்க்ஸ் முகாமை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அல் ஜசீரா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த மே 24 ஆம் திகதி வானில் இருந்து பிடிக்கப்பட்ட படங்களில் ஐ.நா. களஞ்சியம் ஒன்றுக்கு அருகில் இங்கு பல நூறு கூடாரங்கள் இருப்பது தெரிகிறது.
கடந்த சில மாதங்களில் முதல் முறையாக ஹமாஸினால் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையிலேயே இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ரபாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி எட்டு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ரபா மீதான படை நடவடிக்கையை நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் இஸ்ரேல் அங்கு தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரபாவில் உள்ள ஹமாஸ் வளாகம் ஒன்றின் மீதே இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும் ‘துல்லியமான வெடிபொருட்கள் மற்றும் துல்லியமான உளவுத் தகவல் அடிப்படையிலேயே’ இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஞாயிறு இரவு போர்க்கால அமைச்சரவையை கூட்டிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரபா படை நடவடிக்கையை தொடர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. நீதிமன்றத்தின் உத்தரவில் அனுமதி இருப்பதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
டெலிகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை, ‘சியொனிஸ்ட்கள் பொதுமக்கள் மீது மேற்கொள்ளும் படுகொலைக்கு எதிராகவே ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக’ தெரிவித்துள்ளது.
டெல் அவிவில் இருந்து தெற்காக சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலேயே ரபா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸை ஒழிப்பது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ரபா மீது படை நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அங்கு பெரும் எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் நிரம்பி வழியும் நிலையில் பாரிய உயர்ச்சேதங்கள் ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது.
காசாவுக்கான எகிப்து எல்லைக்கடவைக்கு அருகில் ரபா நகர விளிம்புகளில் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைகொண்டிருப்பதோடு அந்த நகரின் கிழக்கு குடியிருப்பு பகுதிகளை நோக்கி டாங்கிகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என்றாலும் இந்த மாத ஆரம்பத்தில் இங்கு படை நடவடிக்கையை ஆரம்பித்த இஸ்ரேலியப் படை இன்னும் ரபா நகருக்குள் நுழையவில்லை.
இந்த மாத ஆரம்பத்தில் ரபா மீதான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் அந்த நகரில் இருந்து 900,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறி உள்ளனர்.
வடக்கு காசாவிலும் மோதல் நீடிப்பதோடு ஜபலியா நகரில் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. இந்தப் பகுதி போர் ஆரம்பித்த தொடக்கத்திலும் கடும் மோதல் இடம்பெற்ற பகுதியாக இருந்தது. வடக்கு காசாவில் கட்டடம் ஒன்றுக்குள் இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன ஜிஹாத் அமைப்பின் ஆயுதப் பிரிவான அல் குத்ஸ் படை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மோதல் தீவிரம் அடைந்திருக்கும் ஜபலியா முகாமின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் கட்டத்திற்குள் இருந்த இஸ்ரேலிய படைகள் மீது ரொக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளை வீசியதாக அல் குத்ஸ் படை கூறியது.
கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் காசா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36,000ஐ தாண்டி இருப்பதோடு மேலும் 80,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.