இந்தியாவில் கைதான ISIS அமைப்பைச் சேர்ந்த இலங்கையர்கள் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தகவல்!

0
141

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி இருந்தமையை அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த நால்வரும் இலங்கையில் வசித்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் கொழும்பில் வசித்ததாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் நேற்று முன்தினம் (20) இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற உளவுத்துறை தகவலுக்கு அமைய குறித்த 4 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் சென்னையில் இருந்து அஹமதாபாத்திற்கு சென்றுள்ளதுடன் இந்தியாவின் தென் பகுதியில் இருந்து சென்ற பயணிகளின் பட்டியலுக்கு அமைய, அவர்களை அடையாளம் காண முடிந்ததாக இந்திய பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசும் உதவியதாக குஜராத் காவல்துறையின் பிரதானி தெரிவித்துள்ளார்.

தற்போது, குறித்த நால்வரும் பாகிஸ்தானில் உள்ள அபு என்ற நபருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நெருங்கியத் தொடர்பைப் பேணியமை தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக அபு என்பவர் குறித்த நால்வரையும் ஊக்குவித்துள்ளார்.

இதன்படி தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த அவர்கள் சம்மதித்துள்ளதுடன் அவர்களுக்கு இலங்கைப் பணத்தில் 400,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக குஜராத் காவல்துறையின் பிரதானி தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய 3 துப்பாக்கிகள் மற்றும் 20 குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.