ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (04) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய பின்னர் இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் சந்திப்பு இது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பசில் ராஜபக்ச தொடராச்சியாக ரணில் விக்ரமசிங்கவிடம் கூறிவருகின்றார். பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் தீர்மானத்திலிருந்து பின்வாங்க போவதில்லையெனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
என்றாலும் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என பசிலிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். இருக்கும் இடையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பானது இணக்கப்பாடுகள் எதுவும் இன்றியே முடிவடைந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் தொடர்பான தீர்மானத்தை ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாகவும் பசில் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்றாலும் இவர்கள் இருவரும் தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்ளவும் மக்கள் மத்தியில் தங்களின் கட்சிகள் மற்றும் மீண்டும் செல்வாக்கை உயர்த்தும் நோக்கத்திலேயுமே இவ்வாறு அடிக்கடி சந்தித்து எதிர்ப்பு வெளியிடுவதும், ஆதரவு வெளியிடுவதுமாக இருக்கின்றனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.